Breaking News
112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைக்கிறார் மோடி இன்று கோவை வருகை

கோவை அருகே வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

மோடி திறந்து வைக்கிறார்

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பிரமாண்டமான இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு சிலையை திறந்துவைத்து பேசுகிறார்.

இந்த விழாவில் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தராராஜே சிந்தியா, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள்.

இன்று மாலை வருகை

இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று மதியம் 2.55 மணிக்கு ராணுவத்துக்கு சொந்தமான தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு கோவை வருகிறார். விமானநிலையத்தில் அவரை தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், பிரதமர் மோடி விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் 5.50 மணிக்கு ஈஷா யோகா மையத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

மாலை 6 மணிக்கு விழா மேடைக்கு செல்லும் பிரதமர், 112 அடி உயரம் கொண்ட சிலையை திறந்து வைத்து பேசுகிறார். பின்னர் விழா முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கு ஓய்வு எடுத்துவிட்டு இரவு 9 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு

பிரதமர் மோடியின் வருகையையொட்டி கோவையிலும் விழா நடைபெறும் பகுதியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை ஐ.ஜி. பியூஸ் பாண்டே தலைமையில் 60 பேர் கோவை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். மேலும் தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் இன்று காலை கோவை வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பிரதமரின் தனிப் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

கோவை விமானநிலையத்தில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு பிரதமர் ஹெலிகாப்டரில் செல்ல வானிலை சரியாக இல்லை என்றால், அவர் கார் மூலம் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் சாலைகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

5 ஆயிரம் போலீசார்

விழா நடக்கும் இடத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

விழாவுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

பிரதமரின் வருகையையொட்டி நேற்று பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டன.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.