Breaking News

சீனாவை எப்படி திறம்பட எதிர்க்கொள்வது என்பதை டொனால்டு டிரம்ப் இந்தியாவிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டும் என அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைக்கான பத்திரிக்கை கருத்து தெரிவித்து உள்ளது.

இந்தியாவிடம் கற்க வேண்டும்

பதவி ஏற்பதற்கு முன்னதாகவே சீனாவிடம் இருந்து சீற்றத்தை எதிர்க்கொண்டு உள்ள டொனால்டு டிரம்ப், சீனாவை எப்படி திறம்பட எதிர்க்கொள்வது என்பதை இந்தியாவிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டும் என அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைக்கான பத்திரிக்கை கருத்து தெரிவித்து உள்ளது.

தைவான் மற்றும் தலாய்லாமா விவகாரத்தில் உலக நாடுகளை சீனா அவ்வபோது மிரட்டி, உருட்டி வருகிறது. அதனுடைய ஆட்டம் இதுவரையில் இந்தியாவிடம் மட்டும் எடுபடவில்லை என்பதை அமெரிக்க பத்திரிக்கை குறிப்பிட்டு உள்ளது.

“சீனாவின் அழுத்தம் காரணமாக உலகின் சக்திவாய்ந்த நாடுகள் உள்பட உலக நாடுகள் இதுவரையில் தைவான் மற்றும் திபெத் தலைவர்களை தவிர்த்து வருகிறது, ஆனால் இவ்விவகாரத்தில் வெளிப்படையாகவே ஒருநாடு சீனாவிற்கு சவாலாக உள்ளது. இந்தியா சுமார் 6 வருடங்களுக்கு மேலாக சீனாவின் கொள்கைக்கு எதிராக உள்ளது,” என்று பத்திரிக்கையில் எழுதப்பட்டு உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு சீனா விவகாரத்தை இந்தியாவில் இருந்த மன்மோகன் சிங் அரசு எப்படி எதிர்க்கொண்டது என்பதையும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சீனாவிற்கு எதிராக “பொதுவாக காணப்படாத வகையில் ஸ்விஃப்ட் மற்றும் தண்டனை நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டதை குறிப்பிட்டு உள்ளது. இந்தியா சீனா உடனான அனைத்து இருதரப்பு ராணுவ உறவையும் சஸ்பெண்ட் செய்தது, கூட்டு பயிற்சியையும் தவிர்த்தது என்பதை கோடிட்டு காட்டிஉள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவத்தின் தலைமை பொறுப்பை ஏற்றிருந்த பிஎஸ் ஜாஸ்வாலுக்கு சீனா விசா வழக்க மறுத்ததை அடுத்து அப்போதைய மத்திய அரசு இத்தகையை பதிலடியை எடுத்தது.

பாகிஸ்தானுடன் நட்புறவை பாராட்டும் பெய்ஜிங், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

ஒரே-சீனா என்ற சீனாவின் கொள்கைக்கு நரேந்திர மோடியும் பிரதமராக பதவியேற்ற பின்னர் சரியான, திறமையான முறையில் கையாண்டு வருகிறார் என்பதும் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 2014-ம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜிங்பிங் இந்தியாவிற்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்ள இருந்ததற்கு முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வெளியிட்ட அறிக்கையில்
“இந்தியாவை பொறுத்தவரையில் ஒரே சீனா கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், சீனா ஒரே இந்தியா என்ற கொள்கையை வலுவாக உறுதிசெய்ய வேண்டும்,” என்றார்.

“அவர்கள்(சீனா) எப்போது திபெத் மற்றும் தைவான் விவகாரத்தை எங்களிடம் எழுப்புகிறார்களோ, அவர்களுடைய உணர்வுகளை நாங்கள் பரிமாறினோம்… அருணாச்சல பிரதேசம் விவகாரத்தில் அவர்கள் எங்களுடை உணர்வுகளை புரிந்துக் கொள்ளவேண்டும் மற்றும் பாராட்ட வேண்டும்,” என்றார். விசா விவகார கண்டிப்பை அடுத்து சுமார் 2 வருடங்களுக்கு பின்னர் ராணுவ உறவை இந்தியா தொடங்கியது.

மிகவும் முக்கியமாக, ஒரே-சீனா என்ற கொள்கையில் 6 வருடங்களுக்கு பின்னர் இந்தியாவிடம் மனமாற்றம் ஏற்பட்ட பின்னர், கவனிக்கத்தக்க அரசியல் அல்லது பொருளாதார பின்னடைவை இந்தியா எதிர்க்கொள்ளவில்லை. ஒரே சீனா என்ற கொள்கையை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, திபெத் விவகாரத்தில் சீனாவிற்கு எதிரான தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் விவகாரத்தில் இந்தியா பின்வாங்கவில்லை. மற்றொரு பக்கம் இந்தியாவின் பிரதமர் மோடி திபெத் மற்றும் எல்லை விவகாரங்களில் வலிமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார் என்பதையும் அமெரிக்காவின் பத்திரிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

தைவான் விவகாரம்

1949-ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்நாட்டுப் போரையடுத்து, தைவான் தீவில் சுயாட்சி நிலவி வருகிறது. இருந்தபோதிலும், சீனாவிடமிருந்து விடுதலை பெற்ற சுதந்திர நாடாக தைவான் அறிவித்துக் கொள்ளவில்லை. இரு பகுதி தலைமைக்கும் சிக்கலான உறவு நிலவுகிறது. தைவானை தங்களது நாட்டின் பகுதியாகவே சீனா இன்னும் கருதி வருகிறது. இரு பகுதிகளும் அரசியல் ரீதியாக ஒரு நாள் மீண்டும் இணையும் என்று காத்திருக்கிறது. அண்மைத் தேர்தலில் ஆட்சியை இழந்த குவோமின்டாங் கட்சி சீனாவுடன் மிக நெருக்கமாகச் செயல்படத் தொடங்கியது. அக்கட்சியின் இந்த நிலைப்பாடு பெரும்பான்மையான தைவான் மக்களிடையே எடுபடவில்லை.

அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்தக் கட்சி தோல்வியைத் தழுவியது.

டிரம்பிற்கு சீனா கண்டனம்

அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தைவான் அதிபருடன் தொலைபேசியில் உரையாடியதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. தைவான் அதிபர் சய்-யிங்வென்னுடன் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் பேசினார், அப்போது அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு சய்-யிங்வென் வாழ்த்து தெரிவித்தார். அவருடைய வாழ்த்துக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். இந்த தகவலை டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டார்.

இதையடுத்து, தைவான் அதிபர் சார்பில் வெளியான செய்திக் குறிப்பில், ஆசியாவை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து இருவரும் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தது. இந்த தொலைபேசி உரையாடல் விவரம் வெளியானதும், சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. “ஒரே சீனா’ என்ற கொள்கையின் அடிப்படையில் அமெரிக்காவும் சீனாவும் உறவு மேற்கொண்டு வருகின்றன. அந்தக் கொள்கையை அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இது தொடர்பாக சீனா-அமெரிக்கா 3 கூட்டறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

தைவான் விவகாரத்தை கவனத்தோடு கையாள வேண்டும். சீனா-அமெரிக்க உறவில் அநாவசியமாகத் தலையிடும் வகையில் யாரும் செயல்படக் கூடாது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது என்றது சீனா. அதிபராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் டொனால்டு டிரம்ப் உலக நாட்டு தலைவர்களுடன் பேசினார் என கருதப்பட்டது. பின்னர் தொலைபேசி அழைப்பு தைவான் அதிபரிடமிருந்து வந்தது என தெளிவுபடுத்தப்பட்டது.

இதற்கிடையே சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங்-யி பேசுகையில், இந்த தொலைபேசி உரையாடல் தைவானின் தந்திரமான செயலாகும். “ஒரே சீனா’ என்ற கொள்கைக்கும் சீன-அமெரிக்க உறவுக்கும் எந்த பாதிப்பும் வராது என்றார்.

டிரம்ப் கண்டனம்

இதற்கிடையே டொனால்டு டிரம்ப், தெற்குசீன கடல் பகுதியில் ராணுவ ஆதிக்கத்தை சீனா விரிவுபடுத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
சீனாவின் தன்னிச்சையான முடிவை இவ்விவகாரத்தில் ஏற்க முடியாது என்றார் டிரம்ப். டிரம்ப் அதிபரானால் சீனாவை தீண்டுவார் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டது. இதற்கிடையே சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டை டிரம்ப் எடுப்பதாகவே சீன பத்திரிக்கைகளின் கட்டுரையாக உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.