Breaking News
பேச்சு கேட்டல் திறனுக்கான சிறப்பு முதுநிலைப்படிப்புகள் படிக்க விருப்பமா?

இந்திய அரசின் உடல்நலம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகம், கர்நாடகாவிலுள்ள மைசூரில் 1966 ஆண்டு அகில இந்தியப் பேச்சு மற்றும் கேட்கும் திறன் நிறுவனத்தினைத் (All India Institute of Speech and Hearing) தொடங்கியது. தன்னாட்சி நிறுவனமான இங்குப் பேச்சு மற்றும் கேட்டல் திறன் சார்ந்த இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்புகள், பட்டயம் மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகள் உள்ளன. 2017-18 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை அண்மையில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பட்டப்படிப்புகள்
நான்கு ஆண்டளவிலான கேட்டலியல் மற்றும் பேச்சு மொழி நோயியல் (Bachelor of Audiology and Speech Language Pathology – B.ASLP – 62 இடங்கள்) இளநிலைப் பட்டப்படிப்பு, 2 ஆண்டு அளவிலான கேட்டலியல் (M.Sc (Audiology) – 36 இடங்கள்), பேச்சு – மொழி நோயியல் (M.Sc (Speech – Language Pathology) – 36 இடங்கள்) ஆகிய முதுநிலைப் பட்டப்படிப்புகள், 2 ஆண்டு அளவிலான சிறப்புக் கல்வி (கேட்கும் திறன் வலுக்குறை) இளநிலைக் கல்வியியல் (Bachelor of Education Special Education (Hearing Impairment) – B.Ed. Sp.Ed.(HI) – 20 இடங்கள்) மற்றும் முதுநிலைக் கல்வியியல் (Master of Education Special Education (Hearing Impairment) – M.Ed. Sp.Ed.(HI) – 20 இடங்கள்) பட்டப்படிப்புகள், 3 ஆண்டு அளவிலான கேட்டலியல் முனைவர் பட்டப்படிப்பு (Ph.D (Audiology) – 4 இடங்கள்), பேச்சு மொழி நோயியல் முனைவர் பட்டப்படிப்பு (Ph.D (Speech-Language Pathology)- 4 இடங்கள்) , மதிப்புறு முனைவர் பட்ட ஆய்வுகள் (Post Doctoral Fellowship – 2 இடங்கள்) போன்ற ஆய்வியல் படிப்புகளும் உள்ளன.

பட்டயப் படிப்புகள்
ஓராண்டு அளவிலான பேச்சுமொழி நோயியலுக்கான மருத்துவ மொழியறிவியல் (PG Diploma in Clinical Linguistics for SLP – PGDCLP – 10 இடங்கள்), தடயவியல் பேச்சு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (PG Diploma in Forensic Speech Sciences & Technology – PGDFSST – 10 இடங்கள்), நரம்பு சார்ந்த கேட்டலியல் (PG Diploma in Neuro Audiology – PGDNA – 10 இடங்கள்), அதிகரிக்கும் ஆற்றல் மற்றும் மாற்றுத் தொடர்புகள் (PG Diploma in Augmentative and Alternative Communication – PGDAAC – 20 இடங்கள்) எனும் முதுநிலைப் பட்டயப்படிப்புகளும், செவிப்புலன் சாதனம் மற்றும் காது வார்ப்புத் தொழில்நுட்பம் (Diploma in Hearing Aid & Ear mould Technology – DHA & ET – 25 இடங்கள்), குழந்தைப் பருவத்துக்கு முந்தைய சிறப்புக் கல்வி (கேட்கும் திறன் வலுக்குறை) (Diploma in Early Childhood Special Education (Hearing Impairment) – DECSE(HI) – 25 இடங்கள்) எனும் பட்டயப்படிப்புகளும் உள்ளன.

கல்வித்தகுதி
கேட்டலியல் மற்றும் பேச்சு மொழி நோயியல் இளநிலைப் படிப்புக்கு (B.ASLP) +2 வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய 4 பாடங்களில் மூன்று பாடங்களைப் படித்து 50% மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வுண்டு.

கேட்டலியல் (M.Sc (Audiology) மற்றும் பேச்சு – மொழி நோயியல் (M.Sc (Speech – Language Pathology) முதுநிலைப் பட்டப்படிப்பிற்குக் கேட்டலியல் மற்றும் பேச்சு மொழி நோயியல் இளநிலைப் பட்டப்படிப்பில் (B.ASLP / B.Sc (Sp & Hg)) 50% மதிப்பெண்கள் தேவை.

இளநிலைக் கல்வியியல் (B.Ed. Sp.Ed.(HI) பட்டப்படிப்பிற்குப் பட்டப்படிப்பிலும், முதுநிலைக் கல்வியியல் (M.Ed. Sp.Ed.(HI) பட்டப்படிப்பிற்கு (B.Ed. Sp.Ed.(HI) பட்டப்படிப்பிலும் 50% மதிப்பெண்களுடன் பல்கலைக்கழகப் பட்டம் தேவை. எஸ்சி; எஸ்டி பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வுண்டு.

பட்டப்படிப்புகள் பிரிவில் கல்வி
யியல் இளநிலைப் பட்டப்படிப்பு தவிர்த்து, அனைத்துக்கும் நுழைவுத்தேர்வு உண்டு. கல்வியியல் இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் அனைத்துப் பட்டயப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டியதில்லை. நுழைவுத்தேர்வுக்கு அவசியமுள்ள பட்டப் படிப்புகளுக்கு http://aiishmysore.in/ எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்புகள் மற்றும் கல்வியியல் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்குப் பொதுப்பிரிவினர் ரூ. 500/- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் ரூ. 325/- என்றும், முனைவர் மற்றும் மதிப்புறு முனைவர் பட்டப்படிப்புகளுக்குப் பொதுப்பிரிவினர் ரூ. 625/- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் ரூ. 425/- என்றும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம். விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 2-5-2017.

பிற இளநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு மற்றும் அனைத்துப் பட்டயப்படிப்பு களுக்கும் மேற்காணும் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினைத் தரவிறக்கி, நிரப்பி ““Director, AIISH, Mysuru – 570 006” எனும் முகவரிக்கு 2-5-2017 ஆம் தேதிக்குள் அனுப்பித்தர வேண்டும். இப்படிப்புகளில், இளநிலைக் கல்வியியல் பட்டப்படிப்பு மற்றும் அனைத்து முதுநிலைப் பட்டயப்படிப்புகளுக்கும் பொதுப்பிரிவினர் ரூ. 500/- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் ரூ. 325/- என்றும், அனைத்துப் பட்டயப்படிப்புகளுக்கும் பொதுப்பிரிவினர் ரூ. 250/- எஸ்சி, எஸ்டி; மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் ரூ. 150/- என்றும் விண்ணப்பக் கட்டணத்தை இணையத்தில் செலுத்த வேண்டும்.

நுழைவுத்தேர்வு
நுழைவுத்தேர்வு படிப்புகளில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் சென்னை, டெல்லி உள்ளிட்ட 9 மையங்களில் மட்டும் 27-5-2017 அன்று நுழைவுத் தேர்வு நடைபெறும். நுழைவுத்தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு 2-6-2017 அன்று அகில இந்தியத் தரப்பட்டியல் வெளியிடப்படும்.

முனைவர் பட்டப்படிப்புகளுக்கு மைசூர் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் தகுதி அவசியம். பிற படிப்புகளுக்கு மாணவர்களின் கல்வித்தகுதி மதிப்பெண்களைக் கொண்டு, இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 16-6-2017 அன்று தேர்வுப்பட்டியல் வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கை
நுழைவுத்தேர்வுத் தரப்பட்டியல் வரிசையைக் கொண்டு இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கும், பிற படிப்புகளுக்கு வெளியிடப்பட்ட தேர்வுப்பட்டியலைக் கொண்டும் கலந்தாய்வு மற்றும் நேர்க்காணலுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும். கூடுதல் தகவல்களுக்கு 0821 – 2502000, 2502100, 2502163 எனும் தொலைபேசி எண்களிலோ அல்லது admissions@aiishmysore.in எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்.

பெட்டிச் செய்தி
பிற படிப்புகள் ஓராண்டு அளவிலான கேட்புத்திறன், மொழி மற்றும் பேச்சு (Diploma in Hearing, Language and Speech – DHLS) பகுதித் தொலைநிலைக் கல்வி வழியிலான (Through Quasi Distance Mode) பட்டயப்படிப்புண்டு. மைசூரு, புதுச்சேரி, இம்பால், புதுடெல்லி, மும்பை, சிம்லா, லக்னோ, அஜ்மீர், கட்டாக், ராஞ்சி, ஜபல்பூர், பாகல்பூர் எனும் 12 இடங்களிலுள்ள பயிற்சி மையங்களில் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மையத்துக்கும் 25 இடங்களுள்ளன. இப்பயிற்சிக்கு +2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் பாடங்களை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைப்படி மாணவர் சேர்க்கை இருக்கும்.

இது தவிர, இங்கு 14 வார கால அளவிலான வளர்ச்சியுற்ற உடல் குறைபாட்டுக் குழந்தைக் காப்பாளர் சான்றிதழ் பயிற்சி (Certificate Course for Caregivers of Children with Developmental Disabilities – C4D2) படிப்பு ஒன்று இருக்கிறது. இப்படிப்பிற்குப் 10வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறையினைப் பின்பற்றிப் பேசும் மொழியின் அடிப்படையில் ஒரு குழுவிற்கு 20-25 இடங்கள் வரை மாணவர் சேர்க்கை இருக்கும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.