Breaking News
ரூ.4 லட்சம் வரை வருமான வரி விலக்கு.. உண்மையில் இது சாத்தியமா..?

இந்தியாவில் பொருளாதார ரீதியிலும் வர்த்தக ரீதியிலும் பல புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் மோடி தலைமையிலான மத்திய அரசு வருமான வரி விதிப்பிலும் புதிய மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் மீதான மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் மோடி பல இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டாலும், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தற்போது அவர் கையில் எடுத்திருக்கும் திட்டத்தின் மூலம் அடுத்தச் சில வருடங்களுக்குச் சாமானிய மக்களின் ஆதரவும் மோடிக்குத் தான்.

மத்திய அரசு வருமான வரி விதிப்பின் குறைந்தபட்ச அளவை 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சமாக உயர்த்தத் திட்டமிட்டு வருவதா இந்தியா டூடே செய்தியை வெளியிட்டுள்ளது.

வருமான வரி விதிப்பின் இப்புதிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பு உத்திர பிரதேச மாநிலத்தின் சட்டசபை தேர்தலுக்கான நாள் அறிவிப்புக்கு முன் வெளியாகும் எனவும் இந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்க வருமான வரி விதிப்பில் மாற்றங்களையும், அதிக வருமான பெறுவோருக்கு சில தளர்வுகளையும் அளிக்க வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியது அனைவருக்கும் நினைவிருக்கும்.

ரகுராம் ராஜன் ஐடியா மற்றும் மத்திய அரசு எடுத்திருக்கும் முயற்சிகள் ஒருபுறம் சிறப்பாக இருந்தாலும், வரி விதிப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் மத்திய அரசின் மிகப்பெரிய வருமானமான வரி வருமானம் குறையும். இதனுடன் ஜிஎஸ்டியின் மூலம் அடுத்தச் சில வருடங்களுக்கு மறைமுக வரியிலும் தாக்கம் இருக்கும்.

இந்தியாவில் தற்போது வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெறுவோர் எவ்விதமான வரியையும் செலுத்த தேவையில்லை. 250,001 முதல் 5,00,000 ரூபாய் வரையில் வருடாந்திர வருமானம் பெறுவோர் 10% வரியும், 5,00,001 முதல் 10,00,000 ரூபாய் 20% வரியும் மற்றும் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிக வருமானம் உடையோர் 30% வரி செலுத்த வேண்டும்.

தற்போது கிடைத்த தகவல்கள் படி புதிய வரி விதிப்பு மாற்றங்கள் மூலம் Rs 4-10 லட்சம் வருமானத்திற்கு 10% வரி, 10-15 லட்சம் 15% வரி, 15-20 லட்சம் வருமானத்திற்கு 20% வரி, 20 லட்சத்திற்கும் அதிக வருமானம் உடையோருக்கு 30% வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.