Breaking News
பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவியரின் சீருடை நீக்கப்பட்ட கொடூரம்

பள்ளி கட்டணத்தை செலுத்தாத மாணவியரின் சீருடைகளை கழற்றி, அவர்களை ஆசிரியை வெளியே அனுப்பிய சம்பவம், பீஹாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளின், கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தை சேர்ந்தவர், சுன்சுன் சாஹ். இவருக்கு, 7 மற்றும் 6 வயதில், இரண்டு மகள்கள். இருவரும் அருகிலுள்ள தனியார் பள்ளியில், இரண்டு மற்றும் ஒன்றாம் வகுப்பு படிக்கின்றனர்.

கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, இரண்டு குழந்தைகளுக்கும், பள்ளி நிர்வாகமே, சீருடை வழங்கியது. அதற்கான தொகையை உடன் செலுத்தும்படி, குழந்தைகளின் தந்தை, சுன்சுன் சாஹிடம், பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. அவரால், குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை செலுத்த முடியவில்லை.

இந்நிலையில், சமீபத்தில், இரண்டு குழந்தைகளும், வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். மாலையில், பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வர, சுன்சுன் சென்றார். அப்போது, சீருடைக்கான பணத்தை செலுத்தும்படி, சுன்சுன் சாஹிடம், ஆசிரியை ஒருவர் கூறினார். ‘என்னிடம் இப்போது பணமில்லை. சில நாட்கள் அவகாசம் கொடுங்கள்; பணத்தை செலுத்தி விடுகிறேன்’ என, சுன்சுன் கெஞ்சினார்.

இதற்கு, ஆசிரியை மறுப்பு தெரிவித்தார். மேலும், பலர் முன்னிலையில், மாணவியர் இருவரும் அணிந்திருந்த சீருடையை கழற்றிய ஆசிரியை, அவர்களை, பள்ளியிலிருந்து அழைத்து செல்லும்படி கூறினார். அதிர்ச்சியடைந்த சுன்சுன் சாஹ், இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பள்ளியின் முதல்வர் மற்றும் சீருடையை கழற்றிய ஆசிரியையை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து, மாநில கல்வித்துறை அமைச்சர் அசோக் சவுத்ரி கூறுகையில், ”நடந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.