Breaking News
ஜூலைக்குள் ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ : அமைச்சர் ராஜு

”பொது மக்களுக்கு, ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள், ஜூலை மாதத்திற்குள் வழங்கி முடிக்கப்படும்,” என, கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.

சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., – முத்தையா: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதி, அரியக் குடி கிராமத்தில், புதிய ரேஷன் கடை அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் ராஜு: அரியக்குடி முழு நேர ரேஷன் கடை, 978 குடும்ப அட்டைகளுடன், அரசு கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. மற்றொரு கடை அமைக்க வேண்டிய அவசியம் எழவில்லை.
தி.மு.க., – புகழேந்தி: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட, வேடந்தாங்கல், மேலவலம்பேட்டை, கருங்குழி போன்ற இடங்களில் கட்டப்பட்ட, ரேஷன் கடைகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. கடந்த முறை கேட்டபோது, என்ன காரணம் என, ஆய்வு செய்யும்படி, அமைச்சர் கூறினார். சாதாரண எம்.எல்.ஏ.,வான நான் எப்படி ஆய்வு செய்ய முடியும்; அமைச்சர் தான் காரணத்தை ஆய்வு செய்து, கடைகளை திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், காந்தி நகரில் கட்டப்பட்ட, ரேஷன் கடையும் திறக்கப்படாமல் உள்ளது.
அமைச்சர் ராஜு: மின் இணைப்பு பெறாதது உட்பட பல்வேறு காரணங்களால், 20 கடைகள் திறக்கப்படாமல் உள்ளன. உறுப்பினர் கூறிய கடைகள், ஏன் திறக்கப்பட வில்லை என்ற காரணத்தை, மாலைக்குள் உறுப்பினருக்கு தெரியப்படுத்துகிறேன்.
தி.மு.க., – பூங்கோதை: என் தொகுதியில், மூன்று புதிய ரேஷன் கடைகள் கட்ட வேண்டும் என, அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன். அவர்கள், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி நடைபெறுவதால், தற்போது, புதிய கடைகள் திறக்க முடியாது என, தெரிவித்தனர். ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி, எப்போது நிறைவடையும்; புதிய கடைகள் எப்போது திறக்கப்படும்?
அமைச்சர் ராஜு: ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி, ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்படும். விதிகளுக்கு உட்பட்டிருந்தால், புதிய கடைகள் திறக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.