Breaking News
வயிற்றுக்கு உகந்த உணவு: சிறுதானியக் கஞ்சி

சித்திரை மாதம் முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறைய வில்லை. அதிகரிக்கும் வெப்பத்தால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை பலரும் உடல் சூட்டால் அவதிப்படுகிறார்கள். காரம், உப்பு, புளி ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிட்டாலும் சிலருக்கு எதுவுமே ஏற்றுக்கொள்வதில்லை. “ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு மாதிரி சாப்பிடணும். வெயில் காலத்தில் எளிதில் செரிமானம் ஆகக் கூடியவற்றைச் சாப்பிடணும். சிறுதானியங்களையும் காய்கறிகளையும் அதிகமா சாப்பிடணும்” என்று சொல்கிறார் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த செல்லம். நிமிடங்களில் சமைத்துவிடக்கூடிய சில ஆரோக்கிய உணவுச் செய்முறையை நம்முடன் அவர் பகிர்ந்துகொள்கிறார்.

சிறுதானியக் கஞ்சி

என்னென்ன தேவை?

சிறுதானியக் குருணை (வரகு, தினை, குதிரைவாலி, கொள்ளு) – ஒரு கப்

தண்ணீர் – 2 கப்

கேரட், பீன்ஸ் – அரை கப்

பால் – அரை கப்

சர்க்கரை அல்லது வெல்லம் – அரை கப்

எப்படிச் செய்வது?

சிறுதானியக் குருணையைத் தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் விட்டு இறக்கிவையுங்கள். கேரட், பீன்ஸ் இரண்டையும் வேகவைத்துக்கொள்ளுங்கள். சிறுதானியக் குருணை ஆறியதும் வேகவைத்த காய்கறிகள், சர்க்கரை அல்லது வெல்லத்தை அதில் சேர்த்துக் கலக்குங்கள். காய்ச்சிய பாலை அதில் ஊற்றிக் கிளறி, இறக்கிவையுங்கள். சத்து நிறைந்த காலை உணவு தயார். இனிப்பு பிடிக்காதவர்கள் சர்க்கரைக்குப் பதில் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.