காஸ்ட்ரோவை இந்தியா மறக்காது: சோனியா காந்தி
அணிசேரா இயக்கத்துக்கும் இந்தியாவுக்கும் ஃபிடல் காஸ்ட்ரோ அளித்த ஆதரவை ஒருபோதும் மறக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நினைவுகூர்ந்துள்ளார்.
ஃபிடல் காஸ்ட்ரோ மறைவையொட்டி சோனியா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
“இந்தியா முன்னின்று தொடங்கிய அணிசேரா நாடுகள் இயக்கத்துக்கு ஃபிடல் காஸ்ட்ரோ முழு ஆதரவு அளித்தார்.
அணிசேரா இயக்கத்துக்கும் இந்தியாவுக்கும் காஸ்ட்ரோ அளித்த ஆதரவை ஒருபோதும் மறக்க முடியாது. அவை இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கும்.
ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவு கியூபாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களின் சுதந்திர போராட்டத்துக்கு காஸ்ட்ரோவின் வாழ்க்கை முன்னுதாரணமாக உள்ளது” என்று சோனியா கூறியுள்ளார்.