ஜெயலலிதா கன்னத்தில் இருந்த ஊசி குத்தல்கள் ஏன்?
மூத்த பத்திரிகையாளர் சரவணன் சவடமுத்து (Saravanan Savadamuthu) அவர்களின் பதிவு:
மறைந்த ஜெயலலிதாவின் முகம், வழக்கம் போல அன்றலர்ந்த தாமரை மாதிரி மலர்ச்சியுடன் இருந்ததையும் அவரது இடதுபுற கன்னத்தில் இருந்த நான்கு புள்ளிகள் ( ஊசி குத்தியதைப்போல) இருந்ததையும் வைத்து தற்போது சமூகவலைதளங்களில் காட்டுத்தீயாக வதந்தி பரவி வருகிறது.
இது குறித்து ஐந்து மருத்துவர்களிடம் விசாரித்தேன்.
“இறந்தவர்களின் முகம் பளிச்சென்று இருக்கவும்.. அடக்கம் செய்யும் நேரம் வரையிலும் கெடாமல் இருக்கவும் ‘எம்பால்மிங்’ எனப்படும் சின்ன டச்சிங் செய்யப்படும். இதை இறந்தபிறகு செய்வார்கள். இதற்கு அரை மணி நேரமாகும்.
சடலத்திற்கு உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டால் மருத்துவமனையிலேயே இதைச் செய்து கொடுப்பார்கள். கன்னத்தில் நான்கு இடங்களிலோ அல்லது மூன்று இடங்களிலோ ஊசி போடுவார்கள். அந்தத் தழும்பு அப்படியேதான் இருக்கும். அது போலத்தான் இங்கேயும் செய்திருக்கிறார்கள். என்ன.. இதற்கு தனியாக கட்டணம் வசூலிப்பார்கள். ஆக, இதுவொரு காஸ்ட்லியான மேக்கப்தான்…!”
எனது குருநாதரான பால கைலாசம், இதே அப்பலோவில் சிகிச்சை பெற்று பலனிக்காமல் இறந்துபோனார். அவரை வீட்டுக்குக் கொண்டு வந்தபோது அவருடைய மூக்கின் இரண்டு பக்கத்திலும் மாஸ்க்கின் ஓரப் பகுதிகள் குத்தி, குத்தி அந்த இடத்தையே ரணகளமாக்கியிருந்தன.
அந்த இடத்தில் பார்மாலிட்டிக்கு இரண்டு பஞ்சுகளை வைத்துவிட்டு “அதை மட்டும் எடுத்திராதீங்க..” என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.
மறுநாள் சடங்கு செய்யும்போது அந்த பஞ்சு காற்றில் பறந்துவிட்டபோதுதான் அந்தக் கொடுமையே தெரிய வந்தது. “இதைக்கூட சரி செஞ்சு அனுப்ப மாட்டார்களா?” என்று எனக்கு அப்போது ஆத்திரம் வந்தது.
இதேபோல் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் முகத்தில், அவரது வலது வாயோரம் ரத்தம் கசிந்த அடையாளம் அப்படியேதான் இருந்தது.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் முகம் வீட்டிற்கு கொண்டு வந்த மறுநாள் காலையில் திடீரென்று கருமையாகிப் போனது.. என்னவென்றே தெரியவில்லை.. அந்த வீடியோ இருந்தால் தேடிப் பாருங்கள்.. புரியும்..!
இப்போது ஜெயலலிதாவுக்கு இந்த எம்பால்மிங்’ சிகிச்சை செய்ததில் தவறில்லை என்றே நினைக்கிறேன். அவர் சினிமா நடிகையாகவும் இருந்ததினால் பொது இடங்களுக்கு வரும்போது கடைசிவரையிலும் தன்னை குறைந்தபட்சம் அழகாக வெளிப்படுத்திக்கொண்டார். இதில் ஒன்றும் தவறில்லை.. அதையே அவருக்கு, சசிகலாவும் பின்பற்றியிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது..!