ரூபாய் நோட்டு: ஒரு மாதம் ஆகியும் பூட்டியே கிடக்கும் ஏடிஎம்கள் – திண்டாடும் பொதுமக்கள்!
500 மற்றும் 10000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மோடி அறிவித்து ஒரு மாதம் ஆகியும் நிலைமை இன்னும் சீரடையவில்லை. ஏடிஎம்கள் செயல்படாததால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.
நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு பிரதமர் மோடி புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். அதன்பிறகு வங்கிகளுக்கு ஒருநாளும், ஏடிஎம்களுக்கு 2 நாளும் விடுமுறை அறிவித்தார். நவம்பர் 11ம் தேதி முதல் ஏடிஎம்கள் செயல்படும் என்று அறிவித்த நிலையில் புதிய ரூபாய் நோட்டுக்களுக்கு ஏற்ப ஏடிஎம்கள் மாற்றியமைக்கும் பணி நடைபெறுவதால், நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏடிஎம்கள் முடங்கியுள்ளன. ஒருமாத காலமாகியும் ஏடிஎம்கள் சரியாக செயல்படாத காரணத்தால் வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க முடியாமலும், சம்பள பணத்தை எடுக்க முடியாமலும் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.
தவிக்கும் மக்கள்
தமிழகத்தில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் டிசம்பர் மாத சம்பளப்பணத்தை எடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். நெல்லை,தூத்துக்குடியில் இன்னும் ஏடிஎம்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வீட்டிற்கு அத்தியாவசிய தேவைகளை சமாளிக்க முடியவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
செல்லாத ரூபாய் நோட்டுக்கள்
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள நவம்பர் 24ஆம்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. டிசம்பர் 2ஆம் தேதி வரை பெட்ரோல் பங்குகளில் பழைய ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டன.
அலையும் மக்கள்
தற்போது பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். ரூபாய் நோட்டு பிரச்சனையால் ஒரு மாதமாகியும் வங்கிகளில் இன்னும் கூட்டம் குறையவில்லை. கடந்த 30ம் தேதி அரசு ஊழியர்களுக்கும். ஓய்வூதியர்களுக்கும் வங்கிகளில் பணம் வரவு வைக்கப்பட்டது. இதனால் அவர்களும் பணம் எடுக்க தினமும் வங்கிகளுக்கு அலைந்து வருகி்ன்றனர்.
ஏடிஎம்களில் சிக்கல்
இதற்கு முன்பு ஏடிஎம்மில் ரூ.40000 ஆயிரம் வரை எடுக்கலாம் என இருந்தது. தற்போது அதிகபட்சமாக ரூ.2500 மட்டுமே ஏடிஎம்மில் எடுக்க முடியும். அதிலும் கணக்கு இல்லாத பிற வங்கி ஏடிஎம்மில் ரூ.2 ஆயிரம் மட்டுமே வருகிறது. ஆனால் இந்த பணத்தை எடுக்க கூட ஏடிஎம்கள் சரியாக இயங்கவில்லை.
மக்கள் தவிப்பு
நெல்லை, தூத்துக்குடியை பொறுத்தவரை கடந்த மாதம் 8ம் தேதி இரவு மூடப்பட்ட பல ஏடிஎம்க்கள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பணம் எடுப்பதற்காக வீதி வீதியாக அலைந்து வருகின்றனர். இதனால் கால விரையம் ஏற்படுவதோடு பணிகளும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளன.