ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவர வேண்டும்.. பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்
ஜெயலலிதா மரணத்தில் உள்ள விடைதெரியாத மர்மங்களை வெளிக்கொண்டுவர பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை கவுதமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழக மக்களால் எழுப்பப்படும் கேள்விகளின் எதிரொலியாக தான் இந்த கடிதத்தை எழுதியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை மற்றும் திடீர் மரணம் உள்ளிட்டவை குறித்து விடைதெரியாத கேள்விகள் ஏராளம் உள்ளதென கூறியுள்ள கவுதமி சிகிச்சையின்போது ஜெயலலிதாவை பார்க்கவிடாமல் தடுத்தது யார் என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
மக்களால் அதிக அன்பு செலுத்தப்பட்டவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா குறித்து ஏன் இந்த அளவுக்கு ரகசியம் காக்கப்படுகிறது என்றும், அவர் சிகிச்சை பெறுவது தொடர்பான முடிவுகளை யார் எடுத்தது என்றும் வினவியுள்ளார். இதற்கு விடையளிக்க வேண்டியது யார் என கேள்வியெழுப்பியுள்ள கவுதமி, இதுபோன்ற ஏராளமான கேள்விகள் தமிழக மக்களால் கேட்கப்படுவதாகவும், அவர்களின் சார்பாக இதனை பிரதமருக்கு தெரிவிப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வாக்களித்து தேர்வு செய்த தங்களது தலைவர்கள் குறித்து தெரிந்துகொள்வது என்பது, ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமை என்றும், இதுதொடர்பாக தாங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புவதாகவும் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் நடிகை கவுதமி கூறியுள்ளார்.