சென்னை, வேலூர் உள்பட 9 இடங்களில் அதிரடி வருமானவரி சோதனை
சென்னை, வேலூர் உள்பட 9 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். சோதனையில் ரூ.95 கோடி ரொக்கம், 120 கிலோ தங்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவல்
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு, அது போன்ற நோட்டுகளை கணக்கில் காட்டாமல் வைத்திருப்பவர்களை பிடிக்கும் முனைப்போடு வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை தங்கமாகவும், புதிய ரூபாய் நோட்டுகளாகவும் சில தொழில் அதிபர்கள் மாற்றி வருவதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சென்னையில் சோதனை
அந்த தகவலின் அடிப்படையில் சுமார் 100–க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்னையில் நேற்று திடீர் சோதனை செய்தனர்.
சென்னையில் உள்ள தொழில் அதிபர்களான சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி மற்றும் பிரேம் ஆகியோருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் அவர்களுக்கு சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நகைக்கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
ரூ.95 கோடி, 120 கிலோ தங்கம்
அண்ணாநகர், தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள ஜே.சி.எஸ்.நிறுவனம், வேலூர் உள்பட 9 இடங்களில் இந்த சோதனையை வருமான வரித்துறையினர் நடத்தினார்கள்.
மேலும் 9 இடங்களில் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை, வேலூர் உள்பட 9 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த சோதனையில் இரவு 7.30 வரை உள்ள நிலவரப்படி ரூ.95 கோடி ரொக்கமும், 120 கிலோ தங்கமும் பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பரிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ தங்கத்தில் 70 கிலோ தங்கம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 2 அறைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 1 கிலோ தங்க கட்டிகளாக இருந்தன.
கைப்பற்றப்பட்டதில் ரூ.10 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஆகும்.
நேற்று பிற்பகல் தொடங்கிய இந்த சோதனை நேற்று இரவு வரை நீடித்தது. இன்றும் (வெள்ளிக்கிழமை) வருமான வரித்துறை அதிகாரிகள் தொழில் அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்த இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து மேலும் பணம், தங்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர்.
விசாரணை
மேற்கூறப்பட்ட தொழில் அதிபர்களிடம் கருப்பு பணமாக பதுக்கி வைக்கப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள், தங்கத்தை வெளிக்கொண்டு வரவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினார்கள்.
சம்பந்தப்பட்ட தொழில் அதிபர்கள் சட்ட விரோதமான பண பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டார்களா? அல்லது முக்கிய தலைவர்களுக்கு முகவர்களாக செயல்பட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தொழில் அதிபர் சேகர் ரெட்டி தமிழக அரசின் பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.