ஜெயலலிதா மறைவு பற்றி பரப்பப்படும் அனைத்தும் திட்டமிட்ட வதந்தி- வைகோ
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி பரப்பப்படும் அனைத்து கருத்துக்களும் சிலரால் பரப்பப்படும் திட்டமிட்ட வதந்தி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த நாளில் இருந்தே ஜெயலலிதா உடல்நிலை குறித்த வதந்திகள் அவ்வப்போது எழுந்தது.
இதனிடையே 75 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னர், மாராடைப்பு ஏற்பட்டு டிசம்பர் 5ம் தேதியன்று மரணமடைந்தார். அப்பல்லோ மருத்துவமனை பற்றி சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஜெயலலிதா உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கைகள் அனைத்தும் சரியானவை தான். அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிராதப் ரெட்டியிடம் அது குறித்து நானே கேட்டறிந்தேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பரப்பப்படும் அனைத்து எதிர்மறை கருத்துக்களும் வதந்தி தான். இவ்வாறு வைகோ கூறினார்.