முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது ‘முத்தலாக்’ முறை-அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு
‘முத்தலாக்’ முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது எனவும் அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.
2 வழக்குகள் தாக்கல்
முஸ்லிம் மதத்தில் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய 3 முறை ‘தலாக்’ கூறும் முத்தலாக் முறை அமலில் உள்ளது.
இந்த நடைமுறை தொடர்பாக உத்தரபிரதேசத்தின் அலகாபாத் ஐகோர்ட்டில் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகளை நீதிபதி சுனித் குமாரை கொண்ட ஒருநபர் அமர்வு விசாரித்து வந்தது.
கொடூரமான செயல்
இதில் நேற்று தீர்ப்பு கூறிய நீதிபதி சுனித் குமார், இந்த முத்தலாக் முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தீர்ப்பளித்தார். இது முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிப்பதோடு, அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் கொடூரமான செயல் எனவும் நீதிபதி கூறினார்.
இந்த முத்தலாக் முறையை ஆதரிக்கும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தை கண்டித்த நீதிபதி, எந்த தனிநபர் சட்ட வாரியமும், அரசியல் சாசனத்துக்கு மேலானது கிடையாது என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.
முன்னதாக முத்தலாக் முறை தொடர்பாக கடந்த மாதம் கருத்து தெரிவித்து இருந்த நீதிபதி சுனித் குமார், ‘தம்பதிகளுக்கு இடையே தவிர்க்க முடியாத சூழல் ஏற்பட்டால் மட்டுமே விவகாரத்து செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறது. இதில் அனைத்து விதமான சமரச முயற்சிகளும் தோல்வி அடைந்தால் மட்டுமே ‘தலாக்’ அல்லது ‘குலா’ முறைப்படி தம்பதிகள் தங்கள் உறவை முடித்துக்கொள்ளலாம்’ என்று கூறியிருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
முத்தலாக் முறை தொடர்பாக இது போன்ற ஒரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. அதில் முத்தலாக் முறைக்கு ஆதரவாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும், எதிராக மத்திய அரசும் வாதிட்டு வருகின்றன.
இந்த சூழலில் அலகாபாத் ஐகோர்ட்டு முத்தலாக்குக்கு எதிராக தீர்ப்பளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.