கருப்பு பண ஒழிப்பால் ஏழை மக்கள் விரைவில் பயனடைவார்கள் – பியூஸ் கோயல்
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் மூலம் கிடைக்கும் ஆதாயம் ஏழை மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு செலவிடப்படும் என மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் நவம்பர் 8-ந் தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உறுதியுடன் உள்ளது.
இந்த நிலையில் பெங்களூர் ஐஐஎம்மில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மின்சார துறை அமைச்சர் பியூஸ் கோயல் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை முழுக்க, முழுக்க நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் எடுக்கப்பட்டது.
நாம் கருப்பு பணத்தை ஒழித்த பயனை விரைவில் அடையப் போகிறோம். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் மூலம் கிடைக்கும் ஆதாயம் மக்களுடன் பகிரப்படும். குறிப்பாக ஏழை மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு உதவும். இந்த திட்டத்திற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஒரு சில மூத்த நிர்வாகிகளை தவிர மற்றவர்கள் இந்த திட்டத்தை வரவேற்கின்றனர். மோடியின் அறிவிப்பை நாடு முழுவதும் ஏராளமான மக்கள் வரவேற்றுள்ளனர் என்றார். மேலும், 2022-ல் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் 24 மணிநேர மின்விநியோக வசதி இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பியூஸ் கோயல் தெரிவித்தார்.