பொது மக்கள் கவலைபட வேண்டாம்… ரிசர்வ் வங்கியிடம் போதிய பணம் கையிருப்பு உள்ளது: அருண் ஜேட்லி
ரிசர்வ் வங்கியிடம் போதிய பணம் கையிருப்பில் உள்ளதாகவும், அதனை படிப்படியாக புழக்கத்தில் விட்டு வருவதால், டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்ய டிசம்பர் 30 -ம் தேதி கடைசி நாளாகும். இதனிடையே டிசம்பர் 30ம் தேதி வரை நாட்டில் பணத் தட்டுப்பாடு நிலவும் என்றும், பின்னர் அது படிப்படியாக நீங்கும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியிடம் போதிய பணம் கையிருப்பில் உள்ளதாகவும் அதனை படிப்படியாக புழக்கத்தில் விட்டு வருவதால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், டிசம்பர் 30ம் தேதிக்குப் பின்னர் சீரான பணப்புழக்கம் நடைபெற தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, நிதியமைச்சகமும் மேற்கொண்டுள்ளது.
அத்துடன் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கையிருப்பிலும் போதிய பணம் உள்ளதால், நாடு முழுவதும் தற்போது அதனை விநியோகம் செய்து வருகிறோம். எனவே, பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.