டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர் தரவரிசையில் 2–வது இடத்தை பிடித்தார், ஜடேஜா பேட்ஸ்மேன்களில் கருண் நாயர் முன்னேற்றம்
ஐ.சி.சி. டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 2–வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
2–வது இடத்தில் கோலி
இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த கடைசி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதன்படி டாப்–5 பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலிடத்தில் நீடிக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த பகல்–இரவு டெஸ்டில் 130, 63 ரன்கள் வீதம் எடுத்ததன் மூலம் அவரது தரவரிசை புள்ளி 21 அதிகரித்து மொத்தம் 918 புள்ளிகளுடன் கம்பீரமாக ‘நம்பர் ஒன்’ அரியணையில் அமர்ந்துள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலி 875 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் தொடருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான 4–வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததால் கிடுகிடுவென ஏற்றம் கண்ட விராட் கோலி, கடைசி டெஸ்டில் சோபிக்கவில்லை. 15 ரன்களில் ஆட்டம் இழந்து விட்டார். அவரது தரவரிசை மாறாவிட்டாலும் 11 புள்ளிகளை இழந்துள்ளார்.
முச்சத நாயகன்
மற்ற இந்திய வீரர்கள் புஜாரா 9–வது இடத்திலும் (ஒரு இடம் குறைவு), ரஹானே 13–வது இடத்திலும் (மாற்றம் இல்லை), முரளிவிஜய் 26–வது இடத்திலும் (2 இடம் சரிவு), இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக் 12–வது இடத்திலும் (ஒரு இடம் இறக்கம்) இருக்கிறார்கள்.
சென்னை டெஸ்டில் 303 ரன்கள் விளாசி பிரமிக்க வைத்த இந்திய வீரர் கருண்நாயர் தரவரிசையிலும் ஜெட் வேகத்தில் ஏறியுள்ளார். தனது ‘கன்னி’ சதத்தை முச்சதமாக மாற்றி வியப்பூட்டிய கருண் நாயர் 122 இடங்கள் முன்னேறி 55–வது இடத்தை பிடித்துள்ளார். இதே போட்டியில் 199 ரன்களில் கேட்ச் ஆன இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 29 இடங்கள் எகிறி தனது சிறந்த நிலையாக 51–வது இடத்தை பிடித்துள்ளார்.
ஜடேஜா முன்னேற்றம்
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. சென்னை டெஸ்டில் இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 10 விக்கெட்டுகளை அள்ளினார். தனது வாழ்க்கையில் முதல்முறையாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய ஜடேஜாவுக்கு தரவரிசையிலும் ‘ஜாக்பாட்’ அடித்துள்ளது. 66 புள்ளிகளை கூடுதலாக சேகரித்துள்ள அவர் 6–வது இடத்தில் இருந்து 2–வது இடத்துக்கு (மொத்தம் 879 புள்ளி) வந்துள்ளார்.
மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தின் அஸ்வின் ‘நம்பர் ஒன்’ ஆக விளங்கினாலும், 17 புள்ளிகளை பறிகொடுத்துள்ளார். சென்னை டெஸ்டில் 207 ரன்களை வாரி வழங்கி வெறும் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்ததால் அது அவரது தரவரிசை புள்ளியிலும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. தற்போது ஜடேஜாவை விட அஸ்வின் 8 புள்ளிகள் மட்டுமே அதிகம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தை புரட்டியெடுத்து இந்திய அணி தொடரை 4–0 என்ற கணக்கில் வென்றதில் அஸ்வினும், ஜடேஜாவும் பக்கபலமாக இருந்தனர். இங்கிலாந்து தொடரில் அஸ்வின் 28 விக்கெட்டுகளும், ஜடேஜா 26 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் சிக்கனத்தில் அஸ்வினை விட ஜடேஜாவே சிறப்பாக செயல்பட்டார். ஜடேஜா ஓவருக்கு சராசரி 2.31 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார்.
1974–ம் ஆண்டுக்கு பிறகு…
முதல் இரு இடங்களை அஸ்வின்–ஜடேஜா கூட்டணி வகிப்பது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் டாப்–2 இடத்தை இந்திய பவுலர்கள் பிடிப்பது இது 2–வது முறையாகும். இதற்கு முன்பு 1974–ம் ஆண்டு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பிஷன்சிங் பெடி, சந்திரசேகர் ஒரு சேர முதல் இரு இடங்களில் இருந்துள்ளனர்.
ஆல்–ரவுண்டர்கள் தரவரிசையில் அஸ்வினின் முதலிடத்துக்கு (482 புள்ளி) ஆபத்து இல்லை. வங்காளதேசத்தின் ஷகிப் அல்–ஹசன் 405 புள்ளிகளுடன் 2–வது இடத்தில் உள்ளார். ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் ஏற்றம் கண்டு 376 புள்ளிகளுடன் 3–வது இடத்தில் இருக்கிறார்.
டாப்–10 பேட்ஸ்மேன்கள்
வரிசை வீரர் நாடு புள்ளி
1 ஸ்டீவன் சுமித் ஆஸ்திரேலியா 918
2 விராட் கோலி இந்தியா 875
3 ஜோ ரூட் இங்கிலாந்து 848
4 வில்லியம்சன் நியூசிலாந்து 817
5 அம்லா தென்ஆப்பிரிக்கா 791
6 டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்கா 778
7 வார்னர் ஆஸ்திரேலியா 749
8 யூனிஸ்கான் பாகிஸ்தான் 745
9 புஜாரா இந்தியா 739
10 பேர்ஸ்டோ இங்கிலாந்து 731
டாப்–10 பவுலர்கள்
1 அஸ்வின் இந்தியா 887
2 ஜடேஜா இந்தியா 879
3 ஹெராத் இலங்கை 867
4 ஸ்டெயின் தென்ஆப்பிரிக்கா 844
5 ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து 810
6 மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா 805
7 ஹேசில்வுட் ஆஸ்திரேலியா 804
8 ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து 803
9 வாக்னெர் நியூசிலாந்து 755
10 யாசிர் ஷா பாகிஸ்தான் 754
‘‘தற்போது இந்திய வீரர்கள் அஸ்வினும், ஜடேஜாவும் முதல் இரு இடங்களை வகிக்கிறார்கள். இந்திய பவுலர்கள் இருவரும் டாப்–2 இடத்தில் இருப்பது கடந்த 42 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்’’