நிறுத்துமிடம் இருந்தால்தான் பதிவு,வாகனங்கள் பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாடு மத்திய அரசு நடவடிக்கை
வாகனங்களை பதிவு செய்வதில் மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை கொண்டு வரப்போகிறது. அதன்படி, நிறுத்துவதற்கு இடம் வைத்திருந்தால் மட்டுமே வாகனங்கள் பதிவு செய்யப்படும்.
வாகனங்களை நிறுத்த ஆக்கிரமிப்பு
பலரும், வீட்டில் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடம் இல்லாமலேயே, இரு சக்கர வாகனங்களையும், கார்களையும், ஆட்டோகளையும் இன்ன பிற வாகனங்களையும் வாங்கி விடுகிறார்கள். பின்னர் அவற்றை நிறுத்தி வைப்பதற்கு, தெருவையும், சாலைகளையும் ஆக்கிரமித்து விடுகிறார்கள்.
இது பல தரப்பினருக்கும் பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்குகிறது.
இட வசதி சான்றிதழ்
இது தொடர்பாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு, டெல்லியில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘வீட்டில் வாகனங்களை நிறுத்திவைப்பதற்கு போதுமான இட வசதி உள்ளது என்று சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்காவிட்டால், எந்தவொரு வாகனங்களும் பதிவு செய்யப்படமாட்டாது’’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் குறிப்பிடும்போது, ‘‘எதிர்காலத்தில் எந்தவொரு கட்டிடமும் கழிவறையின்றி கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது’’ எனவும் கூறினார்.
தரைவழி போக்குவரத்து மந்திரியுடன் விவாதம்
வாகனங்கள் பதிவு செய்வதற்கு, அவற்றை நிறுத்தி வைப்பதற்கான இட வசதி இருக்கிறது என்ற சான்றிதழ் அளிப்பதை கட்டாயம் ஆக்குவது பற்றி மத்திய தரைவழி போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியுடன் விவாதித்து வருவதாகவும், இப்படி ஒரு வழிமுறையை கொண்டு வருவதற்கான இலக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக டெல்லியிலும், தேசிய தலைநகர் பிராந்தியத்திலும், இந்தூரிலும், போபாலிலும் பொது கழிவறைகளை மக்கள் கண்டுகொள்ள உதவுகிற ‘கூகுள் டாய்லட் லொக்கேட்டர்’–ஐ வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். இது வணிக வளாகங்கள், ஆஸ்பத்திரிகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள் என பொது கழிவறைகள் அமைந்துள்ள இடங்களை மக்கள் நாடிச்செல்ல உதவும்.