வரலாற்று சாதனை அளவாக ஜப்பானில் ராணுவத்துக்கு மிகப்பெருந்தொகை ஒதுக்கீடு
சீனாவுடன் ஜப்பானுக்கு கிழக்கு சீனக்கடல் விவகாரத்தில் தகராறு இருந்து வருகிறது. இன்னொருபுறம், ஜப்பானுக்கு வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள், மிரட்டல்களாக அமைந்துள்ளன. எனவே ஜப்பான் அச்சுறுத்தல்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பகை நாடுகளை அதிர வைக்கிற அளவுக்கு ஜப்பான் வரலாற்று சாதனை அளவாக ராணுவத்துக்கு மிகப்பெருந்தொகை நிதி (97.5 டிரில்லியன் யென்) ஒதுக்கி உள்ளது.
போர் விமானங்கள், நீர் மூழ்கி கப்பல்களுக்காக 43.6 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்து 140 கோடி) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆவணத்தில் அந்த நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே கையெழுத்திட்டு விட்டார்.
இந்த பட்ஜெட்டுக்கு ஜப்பான் பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி ஒப்புதல் அளித்து விட்டால், அது ராணுவ பட்ஜெட்டில் தொடர்ந்து 5–வது ஆண்டாக கூடுதல் நிதி ஒதுக்கீட்டைப் பெறும்.
ஜப்பான் 5 புதிய பெரிய ரோந்து கப்பல்கள் வாங்கவும் முடிவு செய்துள்ளது. அத்துடன் 200 கடல்சார் சட்ட பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்கவும் முடிவு செய்துள்ளது.
வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு ஏற்ப தனது நாட்டின் ஏவுகணை திட்டங்களை மேம்படுத்தவும் ஜப்பான் தீர்மானித்து உள்ளது.