களக்காடு காட்டுக்குள்ள அப்படி என்ன சிறப்பு?
களக்காடு முண்டந்துரை காடு திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரந்து காணப்படுகிறது. இந்தியாவின் சிறந்த மலைத்தொடர்களுள் ஒன்றான மேற்கு தொடர்ச்சி மலையில் நெல்லை மாவட்டத்தின் களக்காடு பகுதிகளுக்கு உட்பட்ட காடுகளை இந்திய அரசு பாதுகாக்கப்பட்ட காடுகள் வளையத்துக்குள் வைத்துள்ளது. வன ஆய்வாளர்களின் உரிய அனுமதி இன்றி காட்டுக்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை.
வரலாறு:
இந்தியாவின் இயற்கை வளமிக்க பகுதிகளுள் களக்காடு பாதுகாக்கப்பட்ட காடுகளும் உண்டு. பல்லுயிர்பெருக்கம் இந்த பகுதி காடு மற்றும் மலைகளில் நிறைய இருக்கிறது. அதாவது அதிக எண்ணி்க்கையிலான பலவகையான விலங்குகள், பறவைகள், மரம், செடி கொடிகள் என நிறைந்து காணப்படும் ஒரு அரிய இடமாகும். 1988 ஆம் ஆண்டு இந்திய அரசு களக்காடு வனஉயிரி காடுகளை, புலிகள் சரணாலயமாக அறிவித்தது.
மலையேற்றம் செய்வதற்கு சிறந்த இடமாக இது கருதப்படுகிறது. குறிப்பிட்ட தொலைவு வரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். மேற்கொண்டு செல்ல வனத்துறை அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், புலிகள் சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி மழைக்காலத்துக்கு முன், பின் என ஆண்டுக்கு இருமுறை நடைபெறும்.
இங்கு களக்காடு, திருக்குறுங்குடி,கோதையாறு வனச்சரகங்களுக்குட்பட்ட பகுதிகளில் புலிகள் அதிகளவில் உலாவும் எனத் தெரிகிறது.
களக்காடு வனப்பகுதி, தமிழகத்தின் இரண்டாவது பெரிய காடு ஆகும்.
இடம்:
களக்காடு முண்டந்துரை பாதுகாக்கப்பட வனப்பகுதி நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தில் பரந்து காணப்படுகிறது. காடு சுற்றுலாவுக்கு இந்தியாவின் சிறந்த இடங்களுள் ஒன்றான இது பல நீர் வீழ்ச்சிகளையும் கொண்டுள்ளது.
செல்லும் வழி:
களக்காடு முண்டந்துரை புலிகள் சரணாலயத்துக்கு, சாலை மார்க்கமாக செல்ல, களக்காடு, திருநெல்வேலி, பாபநாசம், சிவசைலம் முதலான இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அருகிலுள்ள ரயில் நிலையம்: திருநெல்வேலி சந்திப்பு
திருநெல்வேலியிலிருந்து, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், பாபநாசம் வழியாகவும், களக்காட்டிலிருந்து சேரன்மாதேவி சாலையை தொடர்ந்து பாபநாசம் வழியாக முண்டந்துரை காடுகளை அடையலாம்.
புலிகள் சரணாலயத்தில் காணப்படும் விலங்குகள்:
பல்லுயிர் பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த காடுகள், பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உறைவிடமாக இருக்கிறது.
இந்த காடுகளைச் சுற்றி புலிகள், யானைகள்,சிறுத்தைகள், வறையாடுகள், சிங்கவால் குரங்குகள், எலிமான்கள், கரடிகள் என பலவகையான விலங்குகள் காணப்படுகின்றன.
பறவைகள்:
பல்லுயிர் பெருக்கக்காடுகளில் மலைகளில் வீழும் அருவிகளும், மழைச்சாரல்களும், மரங்களும் அதிகம் என்பதால் பறவைகள் இங்கு அதிகளவில் இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து வருகின்றன. பல ஆயிரம் கிலோமீட்டர்கள் கடந்து பறந்து வரும் நாடோடி பறவைகள் வாழத் தகுதியான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த காடு.
இந்த காட்டில் மேற்கத்திய வலசை வாலாட்டி, கருங்காடை, புள்ளி மூக்கு வாத்து, பலவகையான குயில்கள், ஆந்தைகள், புதர்காடை, பாம்புண்ணி கழுகுகள் என பல்வேறு வகையான பறவைகளும் உள்ளன.
அகத்தியர் கூடம் பல்லுயிர்க்காடுகள்
மலையேற்றத்துக்கு மிக உகந்த காடுகளில் இந்த பகுதியும் ஒன்று. இது களக்காடு மலைகளை ஒட்டி காணப்படுகிறது. இந்த காட்டில் மலையேற்றத்துக்கு ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அந்த அளவுக்கு இது கடினமான பகுதியாகும். இந்த மலையின் மேற்பகுதியில் அகத்திய முனிக்கு ஒரு கோவிலும் உள்ளது. இங்கு வரும் பல சுற்றுலாப் பயணிகள் அகத்திய முனியை வணங்கிவிட்டு செல்வது வழக்கம்.