திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்!
திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தில் போய்க்கொண்டிருக்கிறீர்கள். அதுவரையிலான புழுக்கம், வியர்வை சடாரென மாறியது போல் இருக்கிறது. உங்களை அறியாமலே ஒரு குளுமை, உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. ஜன்னலுக்கு வெளியே பார்த்தால், பேருந்து, ஆரல்வாய்மொழியை நெருங்கி கொண்டிருக்கிறது. இதுதான் கன்னியாகுமரி மாவட்டம்; காற்றாலைகளும், தென்னை மரங்களும், இதமான வானிலையும்; கேரள பாணி வீடுகளும் ஒருங்கே கொண்ட அழகிய மாவட்டம்.
நாகர்கோவிலில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் இருக்கிறது திற்பரப்பு எனும் சிற்றூர். இங்கு இருக்கிறது புகழ்பெற்ற திற்பரப்பு நீர்வீழ்ச்சி. இது குமரிக் குற்றாலம் என்றும் அழைக்கப்படுகிறது. ஃபேமஸான படப்பிடிப்பு தளம்கூட. கடலோர கவிதைகள் முதல் பல படங்களில் இந்த அருவி வந்திருக்கிறது.
கோதை ஆறு விழுகின்ற இவ்விடத்தில் ஒரு சிவன் கோவிலும் உள்ளது. இது மிகப் பழமை வாய்ந்த கோவில்; பாண்டியர்களைப் பற்றிய தகவல்களை ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
மேலும், தக்கனின் வேள்வியை கலைத்த பிறகு, சிவன், வீரபத்ர மூர்த்தியாக இங்கு வந்ததாக ஐதீகம்.
நீர்வீழ்ச்சி, சிவன் கோவில் ஆகிய இந்த இரண்டு இடங்களும் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களாகத் திகழ்கிறது.
இந்த இடத்தில் இருந்து ஐந்தே கி.மீ தொலைவில் இருக்கிறது அதிகம் அறியப்படாத ஆனால் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய வரலாற்று பொக்கிஷம் – திருநந்திக்கரை குகைக் கோயில்
திருநந்திக்கரை குகைக் கோயில்
திருநந்திக்கரை குகைக் கோயில் கி.பி. ஏழு, எட்டாம் நூற்றாண்டில் பாறையைக் குடைந்து பல்லவர்களால் கட்டப்பட்டது. இக்கோவில், திருவட்டாறு அருகே உள்ளது. சமீபகாலத்தில்தான் கோவில், தமிழ்நாட்டின் அதிகார வரம்பின் கீழ் வந்தது. முன்னர், கேரள கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தக் குகைக்கோயில் முதலில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் சமணர்களுக்காக அமைக்கப்பட்டது. பின்னாளில், இந்து கோவிலாக மாறியது.
குகையின் மண்டபத்தில் அற்புதமாய் அலங்கரிக்கப்பட்ட ஓவியங்களை இருந்திருக்கிறது. ஆனால், காலப்போக்கில் இது மெல்ல மெல்ல அதன் பொலிவை இழந்து இன்று மங்கிய நிலையில் ஒரு வரலாற்று சாட்சியாக காணப்படுகிறது. இந்த ஓவியங்கள், கி.பி 9-10 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே வரையப் பட்ட ஓவியங்கள் ஆகும். இந்த சுவரோவியங்களில் சில கேரள பாணியில் உள்ளன. இந்த ஓவியங்கள், காவியங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைக் காட்சிகளை சித்தரிக்கின்றன.