இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் ஆயுட்கால தலைவராக கல்மாடி நியமனம் விளையாட்டுத்துறை மந்திரி எதிர்ப்பு
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ) தலைவராக 1996-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பதவி வகித்தவர், சுரேஷ் கல்மாடி. 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி நடத்தப்பட்டதில் நிகழ்ந்த கோடிக்கணக்கான நிதிமுறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டு 10 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர். கடும் எதிர்ப்பை தொடர்ந்து ஐ.ஓ.ஏ. பதவியை துறந்தார்.
இந்த நிலையில் 72 வயதான சுரேஷ் கல்மாடி இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கவுரவ ஆயுட்கால தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஐ.ஓ.ஏ. இணையதளத்தில் இந்த தகவல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதே போல் அபய்சிங் சவுதாலாவுக்கும் ஆயுட்கால தலைவர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அபய்சிங் சவுதாலாவும் 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஐ.ஓ.ஏ. தலைவராக இருந்துள்ளார். இவரும் ஊழல் சர்ச்சையில் சிக்கியவர் தான்.
இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் கூறுகையில், ‘சுரேஷ் கல்மாடி, அபய்சிங் சவுதாலா இருவரையும் ஆயுட்கால தலைவராக இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இருவருமே கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர்கள். அவர்களது நியமனத்தை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது குறித்து விரிவாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.
ஐ.ஓ.ஏ நிர்வாகிகளாக சவுதாலா மற்றும் லலித் பனோட் தேர்வு செய்யப்பட்ட போது, ஐ.ஓ.ஏ. அமைப்பை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிரடியாக இடை நீக்கம் செய்ததையும், அவர்கள் இருவரும் நீக்கப்பட்ட பிறகே அந்த நடவடிக்கையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தளர்த்திக் கொண்டதையும் விஜய் கோயல் சுட்டி காட்டினார்.