Breaking News
நடிகைகளை ஆபாசமாக விமர்சிப்பதா? டைரக்டர் சுராஜ் மீது நயன்தாரா, தமன்னா பாய்ச்சல்

பணம் கொடுத்தால் ஆடைகளை களைவார்கள் என்று நடிகைகளை ஆபாசமாக விமர்சிப்பதா? என்று டைரக்டர் சுராஜுக்கு, நடிகைகள் நயன்தாரா, தமன்னா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கவர்ச்சியாக….

விஷால் -தமன்னா ஜோடியாக நடித்த ‘கத்திச்சண்டை’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் டைரக்டு செய்துள்ளார். இதில், தமன்னா கவர்ச்சியாக நடித்துள்ளதாக சுராஜ் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சுராஜ் கூறும்போது, ‘ரசிகர்கள் பணம் கொடுத்து படம் பார்க்க வருகின்றனர். நடிகர்கள் சண்டைபோடவேண்டும், நடிகைகள் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக வரவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கதாநாயகிகள் புடவைக்கட்டிக்கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த வகையில்தான் தமன்னாவை ‘கத்திச்சண்டை’ படத்தில் கவர்ச்சியாக நடிக்க வைத்தேன். கவர்ச்சியாக நடித்த நடிகைகள்தான் பெரிய கதாநாயகிகளாக உயர்ந்து இருக்கிறார்கள். ரூ.1 கோடிக்கு மேல் நடிகைகள் சம்பளம் வாங்குகின்றனர். அவர்கள் டைரக்டர் சொல்கிறபடி கவர்ச்சியாக நடிக்கத்தான் வேண்டும். நடிப்புத்திறமையை காட்டுவதற்கு வேறு கதைகளும், டெலிவிஷன் தொடர்களும் இருக்கின்றன. எனது படங்களில் நடிகைகளை கவர்ச்சியாக நடிக்க வைத்துவிடுவேன்’ என்று கூறியிருந்தார்.

எந்தக்காலத்தை சேர்ந்தவர்

இந்த கருத்து, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நயன்தாரா, தமன்னா ஆகியோர் டைரக்டர் சுராஜுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நயன்தாரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-

சினிமா துறையைச் சேர்ந்த பொறுப்பான ஒருவர் இப்படி கீழ்த்தனமான கருத்தை தெரிவித்திருக்கிறார். நடிகைகள் பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு சுராஜ் யார்?. பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக கதாநாயகிகள் ஆடைகளை களைந்துவிடுவார்கள் என்று அவர் கருதுகிறாரா?. ஆடைகளை களைபவர்கள் தான் நடிகைகள் என்ற கண்ணோட்டத்தில்தான் அவர் கதாநாயகிகளை பார்க்கிறாரா?. தனது குடும்பத்தில் வேலைக்கு செல்லும் பெண்களைப்பற்றி இதுபோன்று தைரியமாக சொல்லமுடியுமா?. ‘தங்கல், பிங்க்’ போன்ற இந்தி படங்கள் பெண்களின் பெருமையை பேசக்கூடியவைகளாக இந்தகாலத்தில் திரைக்கு வந்துள்ளன. பெண்களை அவமதிக்கும் சுராஜ், எந்த காலக்கட்டத்தை சேர்ந்தவர் என்று புரியவில்லை.

யாருக்கும் உரிமை இல்லை

நடிகைகள் கவர்ச்சி உடைகளை கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே அணிகின்றனர். ரசிகர்கள் கவர்ச்சி பொம்மைகளாக நடிகைகளை பார்க்கத்தான் பணம் கொடுத்து தியேட்டருக்கு வருகிறார்கள் என்று எந்த ரசிகர்களை மனதில் வைத்து சொல்கிறார் என்று புரியவில்லை. ஆடைகளை களையவே நடிகைகள் பணம் வாங்கிக்கொண்டு நடிக்கின்றனர் என்று சுராஜ் கூறியதன் மூலம், சினிமாவில் இப்படித்தான் நடக்கிறது என்று எல்லோரும் நடிகைகளைப்பற்றி தவறாக நினைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நானும் வணிக படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். டைரக்டர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ, பணம் கொடுத்தார்கள் என்பதற்காகவோ அப்படி நடிக்கவில்லை. கதைக்கு தேவையாகவும், எனக்கு உடன்பாடாகவும் இருந்தால் மட்டுமே நடித்திருக்கிறேன். நடிகைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

இவ்வாறு நயன்தாரா கூறினார்.

பொம்மைகளாக பார்க்கக்கூடாது

தமன்னா கூறியதாவது:-

நடிகைகள் பற்றி டைரக்டர் சுராஜ் தெரிவித்த கருத்து, என்னை காயப்படுத்தியுள்ளது. கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவர் என்னிடம் மட்டுமின்றி, சினிமா துறையில் உள்ள அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும். நடிகைகளாகிய நாங்கள், ரசிகர்களை சந்தோஷப்படுத்தவே நடிக்கிறோம். அதற்காக எங்களை காட்சி பொம்மைகளாக பார்க்கக்கூடாது.

தென்னிந்திய படங்களில் 11 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். எனக்கு பிடித்த உடைகளை அணிகிறேன். நமது நாட்டின் பெண்களை கேவலமாக பேசுவதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஒரு தனிநபர் கருத்துகளை வைத்துக்கொண்டு, சினிமா துறையே இப்படித்தான் என்று நினைக்கவேண்டாம்’ என ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமன்னா கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.