அமெரிக்காவில் இந்தியர் மீதான லஞ்ச குற்றச்சாட்டு நிரூபணமானது
அமெரிக்காவில் வசித்துவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் காம்தா ராம்நரேயின் (வயது 69). இவர் அங்கு விமானங்களை பழுதுபார்ப்பது, பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் மேற்கொண்டு விமானங்களின் பராமரிப்பு பணிகளை தனது நிறுவனத்தின் மூலம் மேற்கொண்டு வந்தார்.
இதேபோல் விமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை நடத்தி வரும் 5 பேரும், காம்தா ராம்நரேயினும் இணைந்து மெக்சிகோவை சேர்ந்த அதிகாரிகளுக்கு 20 லட்சம் டாலர் (சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம்) வரை லஞ்சமாக கொடுத்து அவர்கள் மூலம் தங்களது நிறுவனங்களுக்கு விமானங்களை பராமரிக்கும் பணிகளின் ஆணையை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கு டெக்சாஸ் மாகாணத்தில் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையில் காம்தா ராம்நரேயின் உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானது.
இந்த வழக்கில் அவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. அவர்களுக்கு அதிகபட்சமாக நீண்ட கால சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.