2017இல் இந்திய வங்கி துறையில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்..!
2016ஆம் ஆண்டின் இறுதி நாட்களை நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு இந்திய வணிகச் சந்தைக்குச் சிறந்த ஆண்டு என்று சொல்லுவதற்கு இயலாது, காரணம் இந்திய வங்கிகளின் மோசமான நிலை.
இந்த ஆண்டில் இந்திய வங்கித் துறை வராக் கடன் உயர்வு, ரிசர்வ் வங்கி கவர்னர் மாற்றம், புதிய கவர்னரின் கொள்கை மாற்றம், நாணய கொள்கையை வடிவமைக்கப் புதிய அமைப்பு, பணவீக்கத்தில் நிலையற்ற தன்மை, ஏற்றுமதியில் சரிவு, ரூபாய் மதிப்புச் சரிவு எனப் பல பாதிப்புகளை எதிர்கொண்டது.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டு இந்திய வங்கித்துறைக்கு எப்படி இருக்கும்.? என்பதை அடுத்த ஆண்டில் ஏற்படப்போகும் மாற்றங்களை வைத்தே நீங்கள் கணித்துவிடலாம்.
2017ஆம் ஆண்டில் இந்தியாவில் புதிதாக 10 சிறு வங்கிகள் மற்றும் 8 பேமெண்ட் வங்கிகள் இந்திய சந்தையில் புதிதாகக் களமிறங்க உள்ளது. இதன் மூலம் இந்திய வங்கித்துறையில் வர்த்தகத்திற்கான போட்டி கடுமையாகும்.
மேலும் இந்திய கிராமப்புறங்களில் அதிகளவிலான வங்கி சேவைகள் எதிர்பார்க்க முடியும். இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவும் பணப் பரிமாற்றத்தில் புதிய உச்சத்தை அடையும்.
2017ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்திற்குள் நாட்டின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது கிளை வங்கிகளுடன் இணைய உள்ளது. இதன் வாயிலாக உலகின் 50 மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இடம்பெறப் போகிறது.
இந்த இணைப்பின் மூலம் இப்புதிய கூட்டணி வங்கியின் வர்த்தகமும் சரி, வருவாய் அளவுகளும் சரி மிகப்பெரிய உச்சத்தை அடையும். இது இந்திய வங்கித்துறைக்கும் மிகப்பெரிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய வங்கித்துறைக்குத் தற்போது மிகப்பெரிய தலைவலியாக்க இருப்பது வராக் கடன்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி 2015ஆம் ஆண்டின் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ஏற்பட்ட வராக் கடனை கடனக்கிட்டு மார்ச் 2017ஆம் ஆண்டுக்குள்ள முழுமையாகத் தீர்க்க அனைத்து வணிக வங்கிகளுக்கும் ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் இந்திய வங்கித்துறை சந்தையில் மேலும் ஸ்திரதன்மையை அடையும்.
இந்தியாவில் கள்ள நோட்டு மற்றும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக மத்திய அரசு நாட்டின் பணப் புழக்கத்தில் 84 சதவீத இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்துள்ளனர்.
இதன் வாயிலாக இந்தியாவில் மைக்ரோ பைனாசிங் சேவை மற்றும் பரிமாற்றங்கள் மக்களால் ஆதரிக்கப்பட்டு வருகிறது. இது இந்திய சந்தைக்குப் புதிய பரிமாற்ற முறை. இதன் மூலம் பல புதிய வர்த்தகச் சந்தை உருவாகவும் வாய்ப்புகள் உண்டு.
500 மற்றும் 1000 ரூபாய் தடையின் மூலம் மக்களின் பணப் பரிமாற்ற முறை அதிகளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து அரசு மற்றும் தனியார் அமைப்புகளும் இதனை நோக்கிய ஒரு மாற்றத்திற்கு வர முடிவு செய்துள்ளனர்.
இந்த மாற்றம் டிஜிட்டல் மயமான பொருளாதாரத்திற்கு ஒரு துவக்கம். இதன் மூலம் மத்திய அரசுக்கு அதிகளவிலான வருவாய்க் கிடைப்பது மட்டும் அல்லாமல் கணக்கில் காட்டக்கூடிய வருவாய் அளவுகளும் அதிகரிக்கும் எனவே வரி வருமானமும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
இத்தகைய மாற்றங்கள் மூலம் இந்திய பங்குச்சந்தையில் வங்கித் துறை பங்குகள் அதிகளவிலான உயர்வைச் சந்திக்க உள்ளது. இதன் அன்னிய முதலீட்டாளர்கள் மூலம் இந்திய சந்தையில் முதலீட்டு அளவுகள் அதிகரிக்கும்.