சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு ஒரு மாதம் தடை உளவுத்துறை எச்சரிக்கையால் அதிரடி நடவடிக்கை
மத்திய உளவுத்துறை எச்சரிக்கையால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு நலன் கருதி ஒரு மாதம் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கை
புத்தாண்டு, பொங்கல் விழா மற்றும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை தீவிரவாதிகள் சீர்குலைக்க திட்டமிட்டு உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
அதன்படி சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலைய போலீசார், மத்திய தொழிற்படையினர், பாதுகாப்பு படையினர் கொண்ட கூட்டு பாதுகாப்பு பணி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பார்வையாளர்களுக்கு தடை
விமான நிலையத்தின் உள் பகுதிகளில் மத்திய தொழிற்படையினர் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் நுழைவு பகுதியில் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் போலீசார் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து அனுமதிக்கின்றனர். பாதுகாப்பு நலன் கருதி விமான நிலையத்தில் பார்வையாளர்கள் அனுமதி வழங்குவதற்கு நேற்று முதல் ஜனவரி மாத இறுதி வரை ஒரு மாதத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதுபோன்ற முக்கியமான தினங்களில் பாதுகாப்பு நலன் கருதி சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு இரு வாரங்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு மாதத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.