ஜனவரியில் எந்தெந்த கார் எவ்வளவு விலை ஏற்றப்போகிறார்கள்?
ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் அனைவரும், இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் நடக்கும் விஷயங்கள் அனைத்தையும் உற்று நோக்குவர் என்றால் அது மிகையில்லை. இதில் புதிய பிராண்ட்களின் அறிமுகம், ஆண்டு இறுதியில் கிடைக்கக்கூடிய தள்ளுபடிகள், புதிதாகக் களமிறங்கும் வாகனங்கள் என மனநிறைவைத் தரும்படியான பல்வேறு அம்சங்கள் இருந்தாலும், ஒவ்வொரு புத்தாண்டின் துவக்கத்திலும் வாகனங்களின் விலையை, பலவகை வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உயர்த்துவது என்பது தவிர்க்கமுடியாத நிகழ்வாகி விட்டது. எப்படி ஒவ்வொரு டிசம்பரிலும் கார்களின் விலை குறைகிறதோ, அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் கார்களின் விலை ஏற்றம் காண்பது என்பது தொடர்ந்து ஜரூராக நடந்து வருகிறது. அந்த வகையில் 2017 ஜனவரியிலும் விலை ஏற்றம் நடைபெறும்.
விலை ஏற்றத்திற்கான வேலைகளில் இப்போதே பல நிறுவனங்கள் பிஸியாகிவிட்டன. புத்தாண்டு தினமான ஜனவரி 1, 2017 முதல் ஹூண்டாய், நிஸான், டாடா மோட்டார்ஸ், ரெனோ, டொயோட்டா, ஹோண்டா, மெர்சிடீஸ் பென்ஸ், இசுஸூ, மஹிந்திரா, ஃபோக்ஸ்வாகன் ஆகிய கார் தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது கார்களின் விலைகளை உயர்த்த உள்ளன. இந்த விலை ஏற்றத்துக்குக்கான காரணங்களாக, வழக்கம்போல ‘ஸ்டீல், அலுமினியம், ரப்பர் போன்ற மூலப் பொருட்களின் விலை உயர்வு; பண மதிப்பு நீக்கம், உற்பத்திச் செலவுகள், கார் விளம்பரத்துக்கான தொகை’ என்று சொல்லியிருக்கின்றன கார் நிறுவனங்கள்.
உதாரணத்துக்கு, டிசம்பர் 2016 மாதத்தில் சுமார் 50,000 ரூபாய் டிஸ்கவுன்ட்டில் கிடைத்த ஹூண்டாய் கிராண்ட் i10 ஹேட்ச்பேக், ஜனவரி 2017-ல் சுமார் 30,000 ரூபாய் வரை விலை கூடியிருக்கலாம்! அதேபோல, தற்போது 86 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் பஜாஜின் புதிய பல்ஸர் 150சிசி கம்யூட்டர் பைக், புத்தாண்டு முதலாக உத்தேசமாக 87 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படலாம். இதனுடன், மஹிந்திராவின் கமர்ஷியல் வாகனங்களின் விலை 0.5 முதல் 1.1 சதவிகிதமும், சிறிய வர்த்தக வாகனங்களின் விலை 1,500 முதல் 6,000 ரூபாய் வரையும் அதிகரிக்கப்பட உள்ளது.
பஜாஜ் நிறுவனமும், தனது லேட்டஸ்ட் அறிமுகமான டோமினார் D400 பைக்கைத் தவிர்த்து, மற்ற டூ-வீலர்களின் விலைகளை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கு தயாரிப்புச் செலவுகள் மற்றும் BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப பைக்குகளை அப்டேட் செய்வதைக் காரணங்களாகக் கூறியுள்ளது பஜாஜ். எனவே நிறுவனங்கள் வாரியாக, விலை ஏற்றத்தின் அளவுகளைத் தற்போது பார்க்கலாம்.
பஜாஜ் – பைக்கைப் பொறுத்து 700 முதல் 1,500 ரூபாய்
செவர்லே – 1 முதல் 3 சதவிகிதம்
டட்ஸன் – மாடலைப் பொறுத்து அதிகபட்சமாக 30,000 ரூபாய்
ஹோண்டா – 3 சதவிகிதம்
ஹூண்டாய் – மாடல்களைப் பொறுத்து அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய்
இசுஸூ – 3 முதல் 4 சதவிகிதம்
மஹிந்திரா – 3,000 ரூபாயில் இருந்து 26,500 ரூபாய்
மெர்சிடீஸ் பென்ஸ் – 2 சதவிகிதம்
நிஸான் – மாடலைப் பொறுத்து 30,000 ரூபாய்
ரெனோ – 3 சதவிகிதம்
டாடா மோட்டார்ஸ் – 5,000 முதல் 25,000 ரூபாய்
டொயோட்டா – 3 சதவிகிதம்
ஃபோக்ஸ்வாகன் – 3 சதவிகிதம்
இவை தோராய விலை ஏற்றங்கள்தான் எனினும், மத்தியதர மக்களிடம் பணப்புழக்கமே குறைந்துவிட்ட நிலையில் இது அவர்களைக் கொஞ்சம் பாதிக்கத்தான் செய்யும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.