“ஜெயலலிதா மரணத்தில் மர்மம்!” உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனும் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல்நிலை கோளாறு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துவந்தார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 5-ம் தேதி மாலை ஜெயலலிதா மிகவும் சீரியஸாக இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. பின்னர் அன்றைய தினம் இரவு 11.30 அளவில், ‘முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துவிட்டார்’ என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துவிட்டது.
சிகிச்சையின்போது இடையிடையே ‘ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். சாப்பிட்டு வருகிறார்’ என்றெல்லாம் அ.தி.மு.க அமைச்சர்களும், மருத்துவமனை நிர்வாகமும் சொல்லிவந்த நிலையில் எப்படி திடீர் மரணம் ஏற்பட முடியும்? நிச்சயம், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது…’ என்று பொதுமக்களும், அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால், இந்தக் குரல்கள் எதுவும் அரசின் செவிக்கு எட்டவில்லை.
இந்த நிலையில், அ.தி.மு.க உறுப்பினரான ஜோசப் ஆண்டனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல தகவல்கள் வெளியானது. இதனால் மத்திய அரசு நேதாஜியின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டறிய ஒரு விசாரணைக்குழு அமைத்து விசாரித்து வந்தது. அதுபோல தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டறிய உச்சநீதிமன்றம் தலைமையில் நீதிக்குழு ஒன்று அமைக்கவேண்டும். அந்த நீதிக்குழு விசாரணை செய்து ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும். சந்தேகம் இருந்தால் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யவேண்டும்.’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனிடம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ”ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக இன்று விசாரணை நடத்தப்படவில்லை. வரும் ஜனவரி மாதம் 9-ம் தேதி விசாரணை செய்யப்படும்’ என்று அறிவித்தார். மேலும் அவர், ‘ஜெயலலிதாவின் மரணத்தில் எனக்கும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால், ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். சாப்பிட்டார், பேசினார் என்றெல்லாம் அறிக்கை விட்டுக்கொண்டிருந்த நிலையில் எப்படி திடீரென ஜெயலலிதாவுக்கு மரணம் ஏற்ப்பட்டது? ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்களையும் கூட பார்க்க அனுமதிக்கவில்லை. கடைசி வரை ஒரு புகைப்படமோ, வீடியோ காட்சியோ ஏன் வெளியிடவில்லை? எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தபோதுகூட மக்களுக்கான சந்தேகதத்தை தீர்க்க புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு இருந்தார். ஆனால், ஜெயலலிதாவுக்கு ஏன் அப்படி செய்யவில்லை? இதனால் எனக்கு இன்னமும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் அதிகரிக்கிறது. உண்மையை கண்டறிய பிரேத பரிசோதனையும் செய்யப்பட வேண்டும். ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளேன்.” என்று உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.