பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஊழலின் ஆணிவேரை அசைத்துள்ளது கருப்பு பணம் பதுக்கியவர்கள் தப்ப முடியாது பிரதமர் மோடி எச்சரிக்கை
பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஊழலின் ஆணிவேரையே அசைத்துள்ளது. கருப்பு பணம் பதுக்கியவர்கள் தப்ப முடியாது என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனியார் டி.வி.க்கு பேட்டி
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு தனியார் டி.வி. சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஒரு மிகப்பெரிய முடிவு. குறுகிய கால ஆதாயத்துக்காக இதை நாங்கள் எடுக்கவில்லை. அமைப்பு ரீதியான நீண்டகால மாற்றத்துக்காக எடுத்துள்ளோம். கருப்பு பண பிடியில் இருந்து பொருளாதாரத்தையும், சமுதாயத்தையும் சுத்தப்படுத்துவதே எங்கள் நோக்கம்.
தூய்மையான நோக்கத்துடன், தெளிவான பார்வையுடன் செயல்பட்டால், நல்ல பலன் கிடைக்கும். எனது விமர்சகர்கள் என்ன சொன்னாலும், இந்த நடவடிக்கையால் நான் தனிப்பட்ட ஆதாயம் எதையும் எதிர்பார்க்கவில்லை. நாட்டு நலனையே எதிர்பார்க்கிறேன்.
ஆணிவேர்
இந்த நடவடிக்கையால், மிகப்பெரிய பொருளாதார வல்லுனர்கள் கூட தங்கள் கணிப்புகளில் குழம்பிப் போய் உள்ளனர். நாட்டின் 125 கோடி மக்களும் இம்முடிவை முழுமனதுடன் ஆதரிக்கிறார்கள். ஏனென்றால், இதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.
இந்த நடவடிக்கை, ஊழலின் ஆணிவேரையே அசைத்துள்ளது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்பட எல்லா தரப்பினரிடம் இருந்தும் கருப்பு பணம் கைப்பற்றப்படுகிறது.
தப்ப முடியாது
எனவே, கருப்பு பணம் பதுக்கியவர்கள் தப்பிக்க அரசு அனுமதிக்காது. அப்படி எதுவும் நடக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
பாராளுமன்றம் செயல்படுவதற்கு நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம். இரு அவைகளிலும் பேசுவதற்கு நான் ஆர்வமாக இருந்தேன். ஆனால், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பாராளுமன்றம் செயல்பட விடாமல் முடக்கி விட்டனர். விவாதம் நடத்துவதை விட முடக்குவதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர்.
பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை நான் வரவேற்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.