பிரியாணிக்கு எந்த சைடிஷ் சிறப்பு…!
பிரியாணியை பிடிக்காதவர் இருப்பார்களா… ட்ரீட் என்றதும் எங்க பிரியாணி டேஸ்டியாக கிடைக்கும் என்றே தேடுவோம். எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுப்பாகாத உணவு, பிரியாணி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேடி சுவைப்பதும் பிரியாணியைதான். ஆனால் இதை அன்றாடம் சாப்பிடலாமா என்றால்… கூடாது என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். பிரியாணிக்கு எந்த சைடிஷ் வைத்து சாப்பிட வேண்டும், என பல குழப்பங்கள் இருந்து வருகிறது.
பிரியாணியுடன் ரைத்தா சாப்பிடலாமா?
பிரியாணியில் நெய், எண்ணெய் எனக் கொழுப்பை அதிகரிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்தக் கொழுப்பைக் குறைக்க, வெங்காயத்தை நறுக்கி சைடுடிஷ்ஷாகச் சாப்பிடலாம். இது உணவில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வெங்காயத்தில், தயிர் சேர்ப்பதில்தான் பிரச்னை தொடங்குகிறது.
பொதுவாக அசைவத்துடன் தயிர் சேர்க்கக் கூடாது எனும் கருத்து உள்ளது. ரைத்தா செய்வதற்கு பாலாடை நீக்கிய பாலில் தயாரித்த தயிரைச் சேர்க்கலாம். மேலும், கடையில் விற்கப்படும் யோகர்ட்டை பயன்படுத்தியும் ரைத்தா செய்யலாம்.
பிரியாணியுடன் சாலட்
பிரியாணியுடன் கேரட், வெள்ளரி, முட்டைகோஸ், வெங்காயம் போன்றவற்றை வேகவைக்காமல், அப்படியே சாலட்போல சேர்த்துக்கொள்வது நல்லது. இது, செரிமானத்துக்கு உதவும். கொழுப்பைக் கரைக்கும்.
புதினா துவையல்
பிரியாணிக்கு சைடுடிஷ்ஷாக புதினா துவையல் சாப்பிடலாம். மந்தமான நிலையை புதினா போக்கும்; புத்துணர்ச்சி கொடுக்கும்; அசைவம் சாப்பிட்ட வாடையைப் போக்க புதினா உதவும்.
கத்திரிக்காய் கொத்சு
இதை பிரியாணியுடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. இதில் சேர்க்கப்படும் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகத் தூள் ஆகியவை செரிமானத்தை மேம்படுத்தும்.
பிரியாணியில் அவசியம் சேர்க்கவேண்டியவை….
பிரியாணியில் அசைவம் சேர்க்கப்படுவதால், செரிமானத்துக்கு உதவும் பட்டை, ஏலம், கிராம்பு, புதினா, இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்ப்பது நல்லது.
பிரியாணி சாப்பிட்ட பிறகு செய்ய வேண்டியவை…. செய்யக் கூடாதவை!
பிரியாணி சாப்பிட்ட பிறகு பால் சேர்க்காத இஞ்சி டீ, கிரீன் டீ, பிளாக் டீ ஆகியவை குடிக்கலாம். இவை, செரிமான சக்தியை அதிகரிக்கும். வயிறு மந்தமாகும் பிரச்னையைத் தடுக்கும்.
எலுமிச்சை அல்லது சாத்துக்குடிப் பழச்சாற்றை அருந்தலாம். இது அசைவத்தில் உள்ள இரும்புச்சத்தை கிரகிக்க உதவும்.
பீடா சாப்பிடலாம். இதுவும் செரிமானத்துக்கு உதவும்.
இளஞ்சூடான நீரை ஒரு கிளாஸ் அளவில் பருகினால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும்.
ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால், வயிற்றில் உள்ள கொழுப்பு கெட்டியாக மாறும்.
கார்பனேட்டட் பானங்கள் குடிப்பதால், வாயுத்தொல்லை உண்டாகும்; காஃபின் இருப்பதால், மந்தநிலை உண்டாகும்; சோர்வைத் தரும் செரிமானத்தைப் பாதிக்கும்.