Breaking News
மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்து இருந்தால் சிறை தண்டனை கிடையாது அவசர சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தது

மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால், சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் அம்சத்தை அவசர சட்டத்தில் இருந்து மத்திய அரசு நீக்கிவிட்டது.

கிரிமினல் குற்றம்

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்வதற்கு மத்திய அரசு அளித்த காலஅவகாசம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.

இந்த காலஅவகாசம் முடிந்த பிறகும் யாராவது அந்த ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால், அவற்றை ஜனவரி 1-ந் தேதி முதல் மார்ச் 31-ந் தேதி வரை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம் என்றும், அதற்கு பிறகும் யாராவது பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால் அதை குற்றமாக கருதப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.

அவசர சட்டம்

இதுதொடர்பாக தயாரிக்கப்பட்ட அவசர சட்டத்துக்கு, பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தனிப்பட்ட நபர், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் அதிகபட்சமாக 10 நோட்டுகள் வரை வைத்துக்கொள்ளவும், ஆராய்ச்சியாளர் என்றால் 25 நோட்டுகள் வைத்துக் கொள்ளவும் இந்த அவசர சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அபராதம்

அந்த எண்ணிக்கைக்கு அதிகமாக யாராவது அந்த நோட்டுகளை வைத்து இருந்தால் அது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்க இந்த அவசர சட்டத்தில் வகை செய்யப்பட்டு இருக்கிறது.

அதன்படி யாராவது அதிக நோட்டுகளை வைத்து இருந்தால், அந்த நபருக்கு ரூ.10 ஆயிரம் அல்லது அவர் வைத்திருக்கும் தொகையில் 5 மடங்கு ஆகிய இரண்டில் எது அதிகமோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும்.

சிறை தண்டனை கிடையாது

இந்த பழைய நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு சில சந்தர்ப்பங்களில் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் அம்சமும் இந்த அவசரசட்டத்தில் இடம் பெற்று இருந்தது.

ஆனால் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் அம்சத்தை மத்திய அரசு நேற்று நீக்கிவிட்டது. இதனால் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து இருப்பவர்களுக்கு சிறை தண்டனை கிடையாது.

நாளை முதல் அமல்

இந்த அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) முதல் இந்த அவசர சட்டம் அமலுக்கு வருகிறது

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.