துருக்கியில் 39 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பு ஏற்பு
துருக்கியில் 39 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது.
இஸ்தான்புல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ரெய்னா என்ற சர்வதேச இரவு விடுதியில் நுழைந்த ஒரு பயங்கரவாதி அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினான். இந்த தாக்குதலில் 39 பேர் கொன்று குவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சுமார் 70 பேர் படுகாயம் அடைந்தனர். கொல்லப்பட்டவர்களில் 16 பேர் வெளிநாட்டினர் என தெரியவந்துள்ளது. இருவர் இந்தியர்.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ‘சாண்டாகிளாஸ்’ என்று அழைக்கப்படுகிற கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் இரவு விடுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை தேடி கைது செய்வதற்கான வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளதாக துருக்கி உள்துறை மந்திரி சுலைமான் சொய்லு தெரிவித்தார். துருக்கியில் குழப்ப நிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்று அந்நாட்டு அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்போது 39 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்று உள்ளது. ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த ஒரு ஜிகாதியே ரெய்னா நைட் கிளப்பில் தாக்குதல் நடத்தினார் என்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே பயங்கரவாதி துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. அவன் அடையாளம் காணப்பட்டு உள்ளான். பயங்கரவாதியை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.