பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 365 ரன்கள் குவிப்பு உணவு இடைவேளைக்குள் சதம் அடித்து வார்னர் அசத்தல்
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 365 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் உணவு இடைவேளைக்குள் அதிவேக சதம் அடித்து அசத்தினார்.
கடைசி டெஸ்ட் கிரிக்கெட்
ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேட் ரென்ஷா, டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
டேவிட் வார்னர் அதிரடியாக அடித்து ஆடினார். மேட் ரென்ஷா நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர்.
வார்னர் அதிவேக சதம்
அசுர வேகத்தில் பேட்டை சுழற்றிய இடக்கை பேட்ஸ்மேனான டேவிட் வார்னர் மதிய உணவு இடைவேளைக்கு 4 நிமிடங்களுக்கு முன்பு 78 பந்துகளில் 17 பவுண்டரியுடன் சதத்தை எட்டினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் மதிய உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்த 5–வது வீரர் என்ற பெருமையை டேவிட் வார்னர் தனதாக்கினார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரர்கள் விக்டர் டிரெம்பர் (1902), சார்லஸ் மகார்ட்னே (1926), டான் பிராட்மேன் (1930), பாகிஸ்தான் வீரர் மஜித்கான் (1976) ஆகியோர் இதேபோல் சதம் கண்டு அசத்தி இருந்தனர். சிட்னி மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் இதுவாகும்.
64–வது டெஸ்டில் விளையாடும் டேவிட் வார்னர் அடித்த 18–வது சதம் இதுவாகும். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் ஒரு நாளில் மதிய உணவு இடைவேளைக்கு முன்பு வீரர் ஒருவர் 100 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும். ஒட்டுமொத்தத்தில் ஆஸ்திரேலிய வீரரின் 4–வது அதிவேக டெஸ்ட் சதம் இதுவாகும்.
ரென்ஷா முதல் சதம்
அணியின் ஸ்கோர் 151 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. அபாரமாக ஆடிய டேவிட் வார்னர் (113 ரன், 95 பந்துகளில் 17 பவுண்டரியுடன்) வஹாப் ரியாஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களம் கண்ட உஸ்மான் கவாஜா (13 ரன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் (24 ரன்) ஆகியோர் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.
இதைத்தொடர்ந்து ஹோன்ட்கோம்ப், ரென்ஷாவுடன் இணைந்தார். நிலைத்து நின்று ஆடிய ரென்ஷா 201 பந்துகளில் 8 பவுண்டரியுடன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதனால் இளம் வயதில் (20 வயது 281 நாட்கள்) டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 3–வது ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர், ஒட்டுமொத்தத்தில் 7–வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
ஆஸ்திரேலியா 365 ரன்கள் குவிப்பு
நேற்றைய ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 365 ரன்கள் குவித்தது. ரென்ஷா 275 பந்துகளில் 18 பவுண்டரியுடன் 167 ரன்னும், ஹேன்ட்கோம்ப் 82 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 40 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர். ரென்ஷா (60.5 ஓவரில்) 91 ரன்னில் இருக்கையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் வீசிய பவுன்சர் பந்து அவரது ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இதில் நிலைகுலைந்து அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்த ரென்ஷாவை அணியின் மருத்துவர் பரிசோதனை செய்தார். அதன் பிறகு தொடர்ந்து ஆடிய அவர் சதம் அடித்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் வஹாப் ரியாஸ் 2 விக்கெட்டும், யாசிர் ஷா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இன்று (புதன்கிழமை) 2–வது நாள் ஆட்டம் நடக்கிறது.