பாலியல் தொல்லைக்கு பெண்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டுவதா? கர்நாடக போலீஸ் மந்திரிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
புத்தாண்டு கொண்டாட்டத்தில் இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லைக்கு அவர்களது உடைதான் காரணம் என்று குற்றம்சாட்டிய கர்நாடக மாநில போலீஸ் மந்திரி பரமேஸ் வருக்கு விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பாலியல் தொல்லை
பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பெயர் பெற்ற எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு ஆகிய பகுதிகளில் 2017-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டம் கடந்த 31-ந் தேதி இரவு நடந்தது. இந்த கொண்டாட்டத்தில் வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சில ஆண்கள், இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்களிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், ஆபாச சைகைகள் காட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தனியார் கன்னட தொலைக்காட்சியில் வெளியானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது.
போலீஸ் விசாரணை
இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் பற்றி போலீஸ் நிலையங்களில் எந்தவித புகாரும் கொடுக்கவில்லை. இதுபற்றி தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என போலீசாருக்கு மாநில மகளிர் ஆணையம் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தேசிய மகளிர் ஆணைய தலைவி லலிதா குமாரமங்கலம், சம்பவம் குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி கர்நாடக மாநில போலீஸ் மந்திரி பரமேஸ்வர், போலீஸ் டி.ஜி.பி. ஓம்பிரகாஷ் மற்றும் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால், போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். எம்.ஜி.ரோடு, பிரிகேடு ரோடு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகள் ஆய்வு செய்யப்பட உள்ளது.
சட்டப்படி நடவடிக்கை
இந்த சம்பவம் பற்றி மாநில போலீஸ் டி.ஜி.பி. ஓம்பிரகாஷ் கூறுகையில், ‘சம்பவம் குறித்து மாநகர போலீசாரிடம் அறிக்கை கேட்டுள்ளேன். பெண்களுக்கு எதிராக யாராவது குற்றம் செய்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு எதிராக தவறு செய்தவர்கள் பற்றிய வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்கள் இருந்தால் அதை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றார்.
பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட் கூறுகையில், ‘ஆதாரங்கள் இல்லாமல் எங்களால் எதுவும் செய்ய முடியாது. சம்பவம் தொடர்பாக போலீசில் எந்த புகாரும் பதிவாகவில்லை. போலீசாருக்கு உத்தரவிட ஊடகங்களை அனுமதிக்க முடியாது’ என்றார்.
மந்திரியின் சர்ச்சை கருத்து
இதற்கிடையே, புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து மாநில போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கருத்து தெரிவிக்கையில், “கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. மேற்கத்திய கலாசாரத்தை இளம்வயதினர் விரும்புகிறார்கள். மேற்கத்திய கலாசார உடைகள் அணிவதினால் சில வேளைகளில் இந்த வகையிலான தொல்லைகள் பெண்களுக்கு ஏற்படுகின்றன” என அவர் கூறி இருந்தார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மந்திரி பரமேஸ்வருக்கு தனியாக தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து, தேசிய மகளிர் ஆணைய தலைவி லலிதா குமாரமங்கலம் கூறுகையில், ‘சம்பவம் பற்றி யாரும் புகார் அளிக்கவில்லை என போலீசார் கூறாமல் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த செயலை ஒருபோதும் ஏற்க முடியாது. நாட்டில் 25 சதவீத ஆண்கள், பெண்கள் குறித்து இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிக்கின்றனர்’ என்றார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர்
இந்த விவகாரம் தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் மகராஷ்டிரா மாநில தலைவர் அபு ஆஸ்மி எம்.எல்.ஏ. கூறுகையில், ‘பெண்கள் குட்டையான உடைகள் அணிவதினால் பாலியல் தொல்லை சம்பவங்கள் நடக்கின்றன. இது பெங்களூரு புத்தாண்டு கொண்டாட்டத்தில் அரங்கேறி உள்ளது. குட்டையான உடைகள் அணிவதினால் பெண்கள் ஆபாசமான முறையில் விமர்சிக்கப்படுகிறார்கள். எனவே, பெண்கள் இந்திய கலாசாரத்தை பின்பற்ற வேண்டும். பெண்கள் தங்களின் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். இரவு நேரங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது நமது கலாசாரம் இல்லை.’ என்று கூறி இருக்கிறார். இவரது கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அபு ஆஸ்மி எம்.எல்.ஏ.வுக்கும் தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
நன்றி : தினத்தந்தி