இந்திய ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார், டோனி தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அறிவிப்பு
இந்திய ஒரு போட்டி மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி நேற்று விலகினார். அதே சமயம் ஒரு வீரராக தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அறிவித்துள்ளார்.
பதவியை துறந்தார், டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர், மகேந்திர சிங் டோனி. 2014–ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து யாரும் எதிர்பாராத வகையில் விடைபெற்ற டோனி, அதன் பிறகு ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிக்குரிய இந்திய அணியின் கேப்டனாக மட்டும் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் திடீரென ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் டோனி விலக முடிவு செய்திருக்கிறார். தனது விருப்பத்தை அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கூறினார். அதை கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த தகவல் கிரிக்கெட் வாரிய செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
35 வயதான டோனி, 2007–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011–ம் ஆண்டு ஒரு நாள் போட்டி (50 ஓவர்) உலக கோப்பையையும் இந்தியாவுக்கு வென்றுத்தந்த மகத்தான சாதனையாளர். மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையையும் 2013–ம் ஆண்டு இவரது தலைமையில் இந்திய அணி ருசித்துள்ளது. ஐ.சி.சி.யின் இந்த மூன்று பெரிய போட்டிகளிலும் மகுடம் சூடிய ஒரே கேப்டன் என்ற அரிய பெருமைக்குரியவர் டோனி ஆவார்.
முடிவு ஏன்?
சமீப காலமாக டோனியின் ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கில்லாடியாக திகழ்ந்த டோனி கடந்த சில ஆட்டங்களில் சொதப்பினார்.
மறுபக்கம் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலியின் எழுச்சியும் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்ததுடன் ‘நம்பர் ஒன்’ அரியணையிலும் ஏறியது. இதனால் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்புகளையும் விராட் கோலியிடமே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனால் தீவிர ஆலோசனைக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து முழுமையாக ஒதுங்கும் முடிவுக்கு டோனி வந்திருக்கிறார். கேப்டன் பதவியை துறந்தாலும், 15–ந்தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் தொடருக்கான அணியின் தேர்வுக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி மும்பையில் நாளை தேர்வு செய்யப்படுகிறது. இதில் ஒரு நாள் போட்டி அணியின் புதிய கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்படுவார். அவரது கேப்டன்ஷிப்பின் கீழ் டோனி முதல் முறையாக இனி விக்கெட் கீப்பராக மட்டும் தொடருவார்.
சாதனை என்ன?
டோனியின் தலைமையில் இந்திய அணி இதுவரை 199 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று அதில் 110–ல் வெற்றியும், 74–ல் தோல்வியும் கண்டுள்ளது. 4 ஆட்டங்கள் சமனில்(டை) முடிந்துள்ளது. 11 ஆட்டங்களில் முடிவு கிடைக்கவில்லை.
சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 72 ஆட்டங்களுக்கு கேப்டனாக பணியாற்றிஉள்ளார். இதில் 41–ல் இந்தியா வெற்றியும், 28–ல் தோல்வியும் சந்தித்துள்ளது. ஒரு ஆட்டம் டை ஆனது. 2 ஆட்டத்தில் முடிவு இல்லை. டோனி 283 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9 சதம் உள்பட 9,110 ரன்கள் குவித்துள்ளார். தற்போதைய முடிவை வைத்து பார்க்கும் போது, டோனி 2019–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஆடமாட்டார்