ஜிம்முக்குப் போறீங்களா ? இதப்படிங்க முதல்ல…
சல்மான், அமிர்கான், பிரபாஸ், ஹ்ருத்திக் ரோஷன், சூர்யா, விஷால், விக்ரம் உள்ளிட்ட நமது சினிமா பிரபலங்கள் படம் வெளியாகும் போதெல்லாம் அவர்களது கட்டுமஸ்தான ஜிம்பாடியைப் பார்த்து, ‘சிக்ஸ் பேக்’ ஆசையில் ஜிம்முக்குப் போகும் இளசுகள் அதிகம். அதிகபட்சம் மூன்று வாரங்கள் சென்றுவிட்டு, கை, கால் வலி, சுளுக்கு, தசைவலி, வீக்கம் எனக் காராணங்களைச் சொல்லி, ஜிம்முக்குச் செல்லாமல் பாதியிலே நின்றுவிடுவார்கள். புதிதாக ஜிம்முக்குச் செல்பவர்கள் சில அடிப்படை விதிமுறைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். அவை என்னென்ன? பார்க்கலாமா?
ஜிம்முக்குள் நுழைந்தவுடனே ஆர்வக்கோளாறில் கடுமையான பயிற்சிகளைச் செய்யக்கூடாது. ஒரே நாளில் எடையைக் குறைத்து ஃபிட்டாவது எல்லாம் சினிமாவில்கூட சாத்தியம் இல்லை.
· ஒரே நாளில் பல மணி நேரம் பயிற்சி செய்வதால் கட்டுடல் வந்துவிடாது. மாறாக, உடல்வலி, வீக்கம், தசைப்பிடிப்புதான் ஏற்படும். பயிற்சியாளரின் அறிவுரைப்படி குறிப்பிட்ட நேரம் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
· புதிதாக ஜிம்முக்குச் செல்பவர்கள், பயிற்சியாளர் அறிவுரையைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும். உடன் பயிற்சி செய்யும் நண்பரின் அறிவுரையைக் கேட்கக் கூடாது. அவர் பின்பற்றும் உடற்பயிற்சி, அவர் உடல் நிலைக்கு ஏற்றதாக இருக்கும். அதை நீங்கள் செய்வது தவறாகவே இருக்கும்.
· காலை எழுந்ததும் ஜிம்முக்குப் போகும் முன்னர், இரவு ஊறவைத்த கொண்டைக்கடலை, முளைகட்டிய பயறு ஆகியவற்றைச் சாப்பிடலாம். எனர்ஜி தரும் பாதாம், வால்நட் ஆகிய நட்ஸ்களும் நல்லது.
· மாலையில் ஜிம்முக்கு செல்பவர்கள், உடற்பயிற்சி செய்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் டீ, காபி, டிஃபன், நொறுக்குத்தீனிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும்.
· உடற்பயிற்சி செய்யும்போது அதிகமாக மூச்சுவாங்கும் என்பதால், தண்ணீர் அதிகமாகக் குடிக்கக் கூடாது. இதனால், ஆக்சிஜன் தேவை பாதிக்கப்படலாம். தண்ணீரே குடிக்கக் கூடாது என்றும் இல்லை. சிறிதளவு அருந்திவிட்டு பயிற்சியைத் தொடரலாம்.
· தோள்ப்பட்டை, மார்பகப் பகுதி, வயிற்றுப் பகுதிக்கான பயிற்சிகளைச் சீரான வேகத்தில் செய்ய வேண்டும். பயிற்சியாளர் பரிந்துரைத்தால் மட்டுமே, மெள்ள மெள்ள வேகத்தை அதிகரிக்கலாம். திடீரென வேகத்தை அதிகரித்தால், தசைப்பிடிப்புகள் ஏற்படலாம்.
· ஜிம் பயிற்சி செய்யும்போது, உடன் செய்பவர்களுடன் பேசிக்கொண்டிருந்தால் கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்து நேர வாய்ப்பு உள்ளது.
· பக்கத்தில் இருப்பவர் கடினமான உபகரணங்களைத் தூக்கிப் பயிற்சி செய்தால், அவரிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள். தவறுதலாக உபகரணங்கள் உங்கள் மீது விழுந்து, காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
· பயிற்சி செய்யும்போது துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க, பிரத்யேக, தரமான டியோட்ரன்ட்கள் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி பயன்படுத்தலாம். பயிற்சி முடித்ததும் குளிப்பது அவசியம்.
· காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் போன்றவை இருந்தால் ஜிம் செல்வதைத் தவிர்க்கலாம்.
· பிரத்தியேக டவல், உடற்பயிற்சி ஆடைகளை வைத்திருக்க வேண்டும். இதையும் தினமும் துவைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். துவைக்காமல் அணிந்தால், துர்நாற்றம் வீசுவது, அரிப்பு, எரிச்சல், சரும ஒவ்வாமை ஏற்படலாம்.
· பயிற்சிக்கு இடையூறு இல்லாத, அதேசமயம் காற்றோட்டமான தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.
· நடக்கும்போது காலைத்தடுக்காத, தரையில் உரசாத ட்ராக்சூட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது போன்ற சிறு தவறுகளால் பயிற்சி செய்யும்போது கால்தடுக்கிப் பெரியவிபத்துகள் நிகழாமல் தவிர்க்க முடியும்.
· உங்களது செல்போன் ரிங்டோன் மற்றவர்களது கவனத்தைத் திசை திருப்பலாம் என்பதால், ஜிம்முக்குப் போனவுடன் போனை சைலன்ட் மோடில் வைக்க வேண்டும்.
· கடினமான பளுவைத் தூக்கி பயிற்சி செய்யும்போது, முடிந்தவரை சத்தம் எழுப்பாமல் இருக்கப் பழகுங்கள். இதனால், மற்றவர்களது கவனம் திசை திரும்பி விபத்துகள் நேரலாம்.
நன்றி : விகடன்