திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கைது மேற்கு வங்காளம் முழுவதும் போராட்டம்; சாலை மறியல்
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கைது செய்யப்பட்டதை கண்டித்து மேற்கு வங்காளம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மாநில பா.ஜனதா பொதுச்செயலாளர் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
2 எம்.பி.க்கள் கைது
மேற்கு வங்காளம், ஒடிசா போன்ற மாநிலங்களில் செயல்பட்டு வந்த ‘ரோஸ் வாலி சிட் பண்ட்’ குழுமத்தின் மோசடி குறித்து சுப்ரீம் கோட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கோடிக்கணக்கில் நடந்துள்ள இந்த மோசடி தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தபஸ்பால் எம்.பி. சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த முறைகேடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசின் மற்றொரு எம்.பி.யும், கட்சியின் பாராளுமன்றக்குழு தலைவருமான சுதீப் பந்தோபாத்யாய்க்கும் சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜரான அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக ஒடிசாவின் புவனேசுவருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மத்திய அரசு மீது தாக்கு
ஒரே வாரத்துக்குள் 2 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்ட நடவடிக்கை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதால், பா.ஜனதா அரசு பழிவாங்கும் செயலில் ஈடுபடுவதாக மம்தா பானர்ஜி உள்பட கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.
கைது நடவடிக்கையால் ஆத்திரமடைந்த கட்சி தொண்டர்கள் மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் முதலே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள்ள பா.ஜனதா அலுவலகங்கள் மீது தாக்குதலும் நடத்தினர்.
சாலை மறியல்
இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நேற்றும் தொடர்ந்தது. வடக்கு மற்றும் தெற்கு பர்கானாக்கள், ஹவுரா, பர்த்வான் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் இயக்கம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். பர்த்வானில் நடந்த போராட்டத்தால் நிலக்கரி ஏற்றிச்செல்லும் வாகனங்களின் இயக்கம் தடைபட்டது.
வெடிகுண்டு வீச்சு
இதற்கிடையே ஹூக்ளி மாவட்டத்தின் ஜேராக்பூரில் உள்ள மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணா பட்டாச்சார்யாவின் வீட்டில் நேற்று முன்தினம் இரவில் புகுந்த சிலர், அவரை பலமாக தாக்கினர். அவரது வீட்டின் ஜன்னல்களை அடித்து உடைத்தும், வெடிகுண்டுகளை வீசியும் சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் உத்தர்பாராவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலில் திரிணாமுல் காங்கிரசாரே ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ள கிருஷ்ணா பட்டாச்சார்யா, இது தொடர்பாக போலீசில் புகாரும் அளித்துள்ளார்.
கவர்னரிடம் மனு
இந்த நிலையில் மாநில கல்வி மந்திரி பார்த்தா சட்டர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். ரூபாய் நோட்டு நடவடிக்கையை எதிர்ப்பதால் மத்திய பா.ஜனதா அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வருவதாக அதில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
முன்னதாக, 2 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டதற்கு பதிலடியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் ஆனந்த்பூர் போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ.க்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு வந்த எம்.பி.யை கைது செய்தது ஏன்? எனவும், ரோஸ் வாலி நிறுவனத்தின் உரிமையாளர் கவுதம் குண்டு, மேற்கு வங்காள சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில், சுதீப் எம்.பி.யை ஒடிசாவுக்கு கொண்டு சென்றது ஏன்? எனவும் அதில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
நன்றி : தினத்தந்தி