நவாஸ் ஷெரீப் மீதான ‘பனாமா ஊழல்’ வழக்கில் தினமும் விசாரணை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு முடிவு
பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ‘பனாமா ஊழல்’ வழக்கில், தினந்தோறும் விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு நேற்று முடிவு செய்தது.
பனாமா ஊழல்
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்கள் வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில், மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ரகசியமாக முதலீடு செய்திருப்பதாகவும், வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள தகவல்கள், உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
பனாமாவின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் சுமார் 1 கோடியே 15 லட்சம் ரகசிய ஆவணங்கள், உலக நாடுகளை சேர்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி கம்பெனிகள் துவங்கவும், ரகசிய வங்கி கணக்குகள் தொடங்கவும் உதவி இருப்பதை அம்பலப்படுத்தி உள்ளன.
நவாஸ் ஷெரீப் பதவியைப் பறிக்க வழக்கு
இந்த ஊழலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதில் அவரது பதவியைப் பறிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான், வக்கீல் தாரிக் ஆசாத், ஜமாத் இ இஸ்லாமி (ஜி) தலைவர் சிராஜூல் ஹக், அவாமி முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் ரஷீத் அகமது ஆகியோர் வழக்கு தொடுத்துள்ளனர்.
விசாரணைகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் அமைத்துள்ள நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் சார்பில் ஆஜரான வக்கீல் நயீம் பொகாரி வாதிடும்போது, “பனாமா ஊழல் விவகாரம் தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் தனது சொத்துக்கள் பற்றி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசி எம்.பி.க்களை தவறாக வழிநடத்தி விட்டார்” என குற்றம் சாட்டினார்.
மேலும், நவாஸ் ஷெரீப்பின் தம்பியும், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியுமான ஷாபாஸ் ஷெரீப், நாட்டுக்கு வெளியே லண்டனில் பண பரிமாற்றங்கள் செய்துள்ளதாகவும், அது தொடர்பாகவும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
நீதிபதிகள் கண்டிப்பு
ஆனால் இந்த வழக்கில், ஷாபாஸ் ஷெரீப் ஒரு தரப்பினராக சேர்க்கப்படவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டி, அவரை கண்டித்தனர்.
அத்துடன், நவாஸ் ஷெரீப்பின் மகன் உசேன் நவாஸ், 2006-ம் ஆண்டுக்கு முன்பாக வெளிநாடுகளில் பல கம்பெனிகளை வாங்கினாரா, இல்லையா என்பதை நயீம் பொகாரி நிரூபிக்க வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்தது.
தினமும் விசாரணை
இறுதியில் இந்த வழக்கில் தினந்தோறும் விசாரணை நடத்துவது என நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான அமர்வு முடிவு எடுத்து அறிவிப்பு வெளியிட்டது.
இந்த வழக்கில் இனியும் தேவையற்று ஒத்திவைப்புகளுக்கு அனுமதி தரப்பட மாட்டாது என அப்போது நீதிபதிகள் கூறினர்.
இறுதியில் நீதிபதி ஆசிப் சயீத் கோசா கூறும்போது, “இந்த வழக்கில் கவனிக்காமல் எதையும் விட்டு விட மாட்டோம்” என குறிப்பிட்டார்.