பெங்களூருவில் நடுரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்து இளம்பெண்ணை மோட்டார் சைக்கிளில் கடத்தி கற்பழிக்க முயற்சி வீடியோ காட்சிகள் வெளியானதால் பரபரப்பு
பெங்களூருவில் நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று கற்பழிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி
பெங்களூரு பானசவாடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கம்மனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் அனிதா(வயது 23, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், கடந்த டிசம்பர் மாதம் 31–ந் தேதி புத்தாண்டை கொண்டாட தனது தோழிகளுடன் வெளியே சென்றிருந்தார். புத்தாண்டை கொண்டாடிவிட்டு கடந்த 1–ந் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கம்மனஹள்ளிக்கு அனிதா ஆட்டோவில் வந்தார். ஆட்டோவில் இருந்து இறங்கி கம்மனஹள்ளி 5–வது மெயின் ரோட்டில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் அனிதாவை கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது. பின்னர் 2 மர்மநபர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி சென்று நடுரோட்டில் அனிதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவரை அங்கிருந்து 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று கற்பழிக்க முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அந்த மர்மநபர்கள் தப்பிச் சென்று விட்டார்கள். இதுகுறித்து போலீசில் அனிதா புகார் எதுவும் கொடுக்கவில்லை.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
இந்த நிலையில், கம்மனஹள்ளி 5–வது மெயின் ரோட்டில் வசிக்கும் ஒருவரின் வீட்டின் முன்பக்க சுவரில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்கள் அனிதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவரை கடத்திச் செல்ல முயன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. தனது வீட்டில் உள்ள கேமராவை நேற்று முன்தினம் உரிமையாளர் பார்த்தபோது, அனிதாவுக்கு மர்மநபர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் காட்சிகள் பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுபற்றி உடனடியாக அவர் பானசவாடி போலீஸ் நிலையத்தில் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து பானசவாடி போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு விசாரணையை தொடங்கினார்கள்.
வீடியோ காட்சிகள் வெளியானது
இந்த நிலையில், அனிதாவுக்கு மர்மநபர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் வீடியோ காட்சிகள் நேற்று கன்னட தொலைக்காட்சிகளில் வெளியானது.
மேலும் கடத்த முயன்றபோது மோட்டார் சைக்கிளில் அனிதா உட்கார மறுத்ததால், அவரை கீழே தள்ளிவிட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் வீடியோ காட்சிகளும் வெளியாகின.
அத்துடன் அனிதாவுக்கு 2 மர்மநபர்களும் பாலியல் தொல்லை கொடுப்பதை அந்த வழியாக சென்றவர்கள் சில அடி தூரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கும் காட்சிகளும் வெளியிடப்பட்டது. ஆனால் அனிதாவை காப்பாற்றவோ, மர்மநபர்களை பிடிக்கவோ யாரும் முன்வரவில்லை.
இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
3 தனிப்படை அமைப்பு
பெங்களூருவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளில், சம்பந்தப்பட்டவர்கள் புகார் கொடுக்கவில்லை என்றாலும், அதுதொடர்பாக தாங்களாகவே(போலீசார்) முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்து இருந்தேன். தற்போது புத்தாண்டை கொண்டாடிவிட்டு சென்ற இளம்பெண்ணுக்கு 2 பேர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
அதுதொடர்பாக வீட்டு உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மகளிர் ஆணைய தலைவி கண்டனம்
இதற்கிடையில், இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அவரை மர்மநபர்கள் கடத்திச் செல்ல முயன்ற சம்பவத்திற்கு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி நாகலட்சுமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படியும், இதுதொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்கும்படியும் கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனருக்கு அவர் நோட்டீசும் அனுப்பி வைத்துள்ளார்.
அத்துடன் இளம்பெண்ணுக்கு மர்மநபர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மாநில மகளிர் ஆணையமும் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாகவும், பெங்களூருவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்தும் போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து பேசுவேன் என்றும் நாகலட்சுமி தெரிவித்துள்ளார்.
12 பேரை பிடித்து விசாரணை
இந்த நிலையில், பெங்களூரு சட்டம்–ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் (கிழக்கு) ஹேமந்த் நிம்பால்கர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பானசவாடி போலீஸ் நிலையத்திற்கு நேற்று நேரில் சென்றார்கள். மேலும் கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் கம்மனஹள்ளி மெயின் ரோட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றியும் ஆய்வு செய்தார்கள். மேலும் கேமராவில் பதிவான மர்மநபர்களின் மோட்டார் சைக்கிளின் பதிவு எண் மூலமும், அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தார்கள்.
அதன்படி, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலமாகவும், கடந்த டிசம்பர் மாதம் 31–ந் தேதி நள்ளிரவு மற்றும் கடந்த 1–ந் தேதி அதிகாலையில் சந்தேகத்தின் பேரில் நடமாடிய 12 பேரை பானசவாடி போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நிம்பால்கர் விசாரணை நடத்தினார். அவர்களில் ஒருவருக்கு, அனிதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததில் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த 12 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெரும் பரபரப்பு
பெங்களூருவில் இளம்பெண்ணுக்கு 2 மர்மநபர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி : தினத்தந்தி