மும்பையில் வான்வழி ஆம்புலன்ஸ் சேவை சயான், கே.இ.எம். மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்கு நவீன வார்டுகள் மாநகராட்சி கூடுதல் கமிஷனர் தகவல்
மும்பையில் வான்வழி ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படும், சயான், கே.இ.எம். மருத்துவமனையில் தீக்காய சிகிச்சைக்கு நவீன வார்டுகள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி கூடுதல் கமிஷனர் நிலைக்குழு கூட்டத்தில் தெரிவித்தார்.
தீ விபத்துகள்
மும்பையில் கடந்த 2015–ம் ஆண்டு மே மாதம் கல்பாதேவியில் உள்ள கோகுல்நிவாஸ் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்கும் பணியின்போது தீயணைப்புத்துறை அதிகாரிகள் தீயில் கருகினார்கள். அவர்கள் நவிமும்பை ஐரோலியில் உள்ள தேசிய தீக்காய மையத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள்.
இதேபோல அண்மையில் மகாலட்சுமி ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகில் காகத்தை மீட்கும் பணியின் போது, 3 தீயணைப்பு வீரர்கள் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர். இவர்களும் ஐரோலி தேசிய தீக்காய மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வான்வழி ஆம்புலன்ஸ்
இந்த சம்பவங்களை தொடர்ந்து, மும்பை மாநகராட்சி தனது நிர்வாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நவீன வார்டுகளை அமைப்பதற்கு திட்டமிட்டு உள்ளது. நேற்றுமுன்தினம் நடந்த மாநகராட்சி நிலைக்குழு கூட்டத்தில் இதை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் ஐ.ஏ.குந்தன் தெரிவித்தார்.
மேலும் மும்பை பரேலில் உள்ள கே.இ.எம். மருத்துவமனை மற்றும் சயான் மருத்துவமனை ஆகியவற்றில் தீக்காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கு நவீன வார்டுகளை அமைக்கவும், தீக்காயம், விபத்து, பேரிடர் போன்ற சம்பவங்களில் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு வசதியாக வான்வழி ஆம்புலன்ஸ் சேவை தொடங்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருவதாக கூறினார்.