உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் டோனி’ முன்னாள் வீரர்கள் புகழாரம்
உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் டோனி’ என்று முன்னாள் வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகல்
இந்திய ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியை வகித்து வந்த 35 வயதான டோனி திடீரென நேற்று முன்தினம் அந்த பதவிகளில் இருந்து விலகினார். விக்கெட் கீப்பரான டோனி ஒரு வீரராக தொடர்ந்து நீடிப்பேன் என்று தெரிவித்து இருக்கிறார்.
20 ஓவர் உலக கோப்பை, ஒரு நாள் போட்டி உலக கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை, ஆசிய கோப்பை, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக முத்தரப்பு கோப்பை என்று சகலத்தையும் வென்றுத் தந்ததுடன், மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்தியாவை ‘நம்பர் ஒன்’ சிம்மாசனத்திலும் அமர்த்தியவர். இப்படி கேப்டனாக பல்வேறு அரிய சாதனைகளை படைத்த டோனியின் விலகல் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
சச்சின் தெண்டுல்கர்
இந்த நிலையில் டோனிக்கு பல்வேறு இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் சமூக வலைதளங்கள் மூலம் புகழாரம் சூட்டியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
சச்சின் தெண்டுல்கர் (இந்திய முன்னாள் வீரர்): 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி உலக கோப்பையை இந்தியாவுக்காக வென்றுத்தந்த டோனிக்கு எனது வாழ்த்துகள். வளர்ந்து வரும் வீரராக, அதன் பிறகு ஆக்ரோஷமான வீரராக என்ற நிலையில் இருந்து உறுதிமிக்க ஒரு அணித்தலைவராக உருவெடுத்ததுவரை அவரை நான் பார்த்து வருகிறேன். அவரது வெற்றிகரமான கேப்டன்ஷிப்பை கொண்டாட வேண்டிய தினம் இது. அதே சமயம் அவரது முடிவுக்கும் நாம் மதிப்பு அளிக்க வேண்டும். களத்தில் ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தும் வகையில் விளையாட வாழ்த்துகள்.
தர்ணா நடத்தியிருப்பேன்
சுனில் கவாஸ்கர் (இந்திய முன்னாள் கேப்டன்): டோனி மட்டும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்திருந்தால், அதை திரும்ப பெறும்படி வலியுறுத்தி அவரது வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்தியிருப்பேன். ஒரு வீரராக இன்னும் எதிரணியின் பந்து வீச்சை அவரால் நொறுக்கி தள்ள முடியும். ஒரே ஓவரில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமைசாலி. அவரை போன்ற வீரர் அணிக்கு மிகவும் அவசியமாகும். தொடர்ந்து விளையாட அவர் முடிவு எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை விளையாடுவதா? இல்லையா? என்பது அவரது விருப்பமும் ஆட்டத்திறனை சார்ந்த விஷயமாகும்.
ஸ்ரீகாந்த் (இந்திய முன்னாள் வீரர்): கேப்டன் பதவியை அடுத்தவருக்கு கொடுக்கும் தருணத்தை அறிந்த ஒரு உண்மையான தலைவரின் அடையாளமே, டோனியின் விலகல். எங்களை உற்சாகப்படுத்திய கேப்டனுக்கு நன்றி.
இன்னும் பங்களிப்பை அளிக்க முடியும்
மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்): இந்திய அளவில் அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டனாக அந்த பதவியில் இருந்து டோனி விடைபெறுகிறார். அவர் மிகச்சிறந்த மனிதரும் கூட. இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னும் அவரால் நிறைய பங்களிப்பை வழங்க முடியும். இப்போது மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) இந்திய கிரிக்கெட் அணிக்கும் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்பதற்கு இதுவே சரியான நேரமாகும். அவர் ஒரு சூப்பர் ஸ்டார். சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்.
மைக்கேல் வாகன் (இங்கிலாந்து முன்னாள் கேப்டன்): ஒட்டுமொத்த அளவில் உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவரே, இனி போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டார். அவரது ஈடுஇணையற்ற தலைமைத்துவத்துக்கு வாழ்த்துகள்.
அப்ரிடி (பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர்): சிறந்த அணியாக இந்தியாவை வார்த்தெடுத்த எல்லா பெருமையும் டோனியையே சாரும். சிறந்த அணித்தலைவரான அவர் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு உந்துசக்தி.
தாக்கத்தை ஏற்படுத்தியவர்
ரோகித் சர்மா (இந்திய வீரர்): உண்மையான அணித்தலைவர். நிறைய கிரிக்கெட் வீரர்களின் ஆட்ட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அதில் நானும் அடங்குவேன். 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் என்னை முதல் முறையாக தொடக்க வீரராக இறங்கும்படி அறிவுறுத்தினார். உண்மையிலேயே அவரது கேப்டன்ஷிப்பை தவற விடுகிறேன்.
ரஹானே (இந்திய வீரர்): எனது முதல் சர்வதேச கேப்டன். உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அதற்கு நன்றி.
ஹர்திக் பாண்ட்யா: (இந்திய ஆல்-ரவுண்டர்): லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு டோனி நீங்கள் ஒரு உத்வேகம் அளிக்கக்கூடியவர். அவரது தலைமையின் கீழ் விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் பொக்கிஷமாக பார்க்கிறேன். என்றும் மறக்காது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
நன்றி : தினத்தந்தி