குரங்கை அடித்து கொன்றதால் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவரை தேர்வு எழுத அனுமதிப்பது குறித்து ஒருவாரத்தில் முடிவு எடுக்கவேண்டும் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
குரங்கை அடித்து கொலை செய்த சம்பவத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவரை, தேர்வு எழுத அனுமதிப்பது குறித்து டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
குரங்கை கொன்றதால் இடைநீக்கம்
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் சிலர் கடந்த நவம்பர் மாதம் விடுதியில் சுற்றித்திரிந்த பெண் குரங்கு ஒன்றை பிடித்து கொடூரமாக அடித்துக்கொலை செய்து புதைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதே சமயம், மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் ஒரு விசாரணை குழுவை அமைத்தது.
அந்த குழு நடத்திய விசாரணையில், மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேர் குரங்கை சித்ரவதை செய்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த 4 மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதில் ஒரு மாணவரான கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த அருண் லூயிஸ் சசிகுமார் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
இறுதியாண்டு தேர்வு
குரங்கை அடித்துக்கொலை செய்தது தொடர்பாக விசாரணை நடத்திய கல்லூரி விசாரணைக்குழுவினர் என்னுடைய கருத்தை தெரிவிக்க அனுமதிக்கவில்லை. அவர்கள் எழுதி கொடுத்த ஒரு அறிக்கையில் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். அதில், குரங்கின் சாவில் என்னுடைய பங்கு உண்டு என்று கூறப்பட்டிருந்தது. இதன்பின்னர் என்னை இடைநீக்கம் செய்தனர். தற்போது எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு தேர்வு அடுத்த மாதம் (பிப்ரவரி) நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பம் கோரி கடந்த டிசம்பர் 19–ந் தேதி கல்லூரி நிர்வாகத்திடம் மனு கொடுத்தேன். ஆனால், என் மனுவை கல்லூரி நிர்வாகம் நிராகரித்துவிட்டது. எனவே இந்த தேர்வில் நான் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பதிவாளர், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
முடிவு எடுக்க வேண்டும்
பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள இறுதியாண்டு தேர்வுக்கு, வருகிற 12–ந் தேதிக்குள் அபராதத்துடன் தேர்வுக் கட்டணம் செலுத்த முடியும். எனவே, தேர்வு எழுத அனுமதி கேட்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்திடம் மனுதாரர், 6–ந்தேதி (இன்று) மனு கொடுக்கவேண்டும்.
அந்த மனுவை பெற்றுக்கொண்டு, மனுதாரரை தேர்வு எழுத அனுமதிக்கலாமா? என்பது குறித்து பல்கலைக்கழகம் சுதந்திரமாக விசாரணை நடத்தி ஒரு வாரத்துக்குள் தகுந்த முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி : தினத்தந்தி