தனியார் அமைப்புகள் மூலம் ஆதார் விவரம் சேகரிப்பதா? உச்சநீதிமன்றம் கண்டனம்
ஆதார் புள்ளி விவரங்களை சேகரிக்கும் பொறுப்பை தனியார் ஏஜென்சிகளிடம் விடுவது நல்ல யோசனை அல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசின் பல்வேறு நலத் திட்டங்களுக்காக ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் அட்டை பெற பொதுமக்களிடம் கைரேகை மற்றும் கண் கருவிழி பதிவு செய்யப்படுகிறது; அவர்களின் முகவரி, பிறந்த தினம் உள்ளிட்ட விபரங்களும் பெறப்படுகின்றன.
இந்த விபரங்கள், ஒப்பந்தஅடிப்படையில் தனியார் அமைப்புகள் மூலம் சேகரிக்கப்படுகின்றன. இது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின் படி தனிப்பட்ட உரிமைகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் கூறும்போது, ஆதார் தகவல்கள் சேகரிக்கும் பணி தனிநபர் அந்தரங்கம் தொடர்பானது என்பதால் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். ஆதார் புள்ளிவிவரம் சேகரிக்கும் பணியில் தனியார் ஏஜென்சிகள் ஈடுபட்டு வருகின்றன என்றார்.
இதற்கு நீதிபதிகள், ‘இவ்வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது. என்றாலும் ஆதார் புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பொறுப்பை தனியார் அமைப்பிடம் விடுவது நல்ல யோசனை அல்ல’ என்றனர்.