மும்பை விமான நிலையத்தில் ரூ.5 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் மலேசியாவுக்கு கடத்த முயன்றவர் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை மலேசியாவுக்கு கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
மலேசியா செல்லும் விமானம்
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 1 மணியளவில் மலேசியா செல்லும் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் ஏறுவதற்காக பயணிகள் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணிப்பதற்காக வந்த ரபிகான் அப்துல்லா(வயது39) என்ற பயணியின் நடவடிக்கையில் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் உண்டானது. எனவே அவரை தனி அறைக்கு அழைத்து சென்று, அவரது உடைமைகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர்.
இந்த சோதனையின் போது, அவர் கொண்டு வந்த பெட்டிகளில் சப்பாத்தி தயார் செய்யும் 15 உபகரணங்கள் இருந்தன.
ரூ.5 கோடி போதைப்பொருட்கள்
இதைத்தொடர்ந்து அந்த சப்பாத்தி தயார் செய்யும் உபரகணங்களை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, அதில் ‘‘ஏபடிரைன்’’ மற்றும் ‘‘மெத்தம்பேட்டேமைன்’’ என்ற போதைப்பொருட்கள் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் 4 கிலோ 753 கிராம் எடை கொண்டதாக இருந்தன. இதையடுத்து ரபிகான் அப்துல்லா அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் அந்த போதைப்பொருட்களை மலேசியாவுக்கு கடத்த இருந்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
நன்றி : தினத்தந்தி