வெள்ளை மாளிகையில் ஒபாமா மகள்கள் ஆடிய ஊஞ்சல்… தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை
அதிபர் ஜான் எஃப் கென்னடிக்குப் பிறகு, சிறு வயது குழந்தைகளுடன் வெள்ளை மாளிகையில் குடியேறியது ஒபாமாதான். மகள்கள் மலியா சாஷா 10 மற்றும் 7 வயது குழந்தைகள்.
குழந்தைகள் விளையாடுவதற்காக, ஒபாமா தனது சொந்த செலவில் ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டுக் கருவிகளை வெள்ளை மாளிகையில், அதிபரின் ஓவல் அலுவலக அறைக்கு எதிரே நிறுவினார்.
பள்ளியிலிருந்து வந்ததும் பிள்ளைகள் விளையாடுவதை தனது அலுவலகத்திலிருந்தே அவரால் பார்க்க முடிந்தது. அதைப் பார்த்த சில சமயங்களில் ஒபாமாவுக்கே அந்த ஊஞ்சலில் விளையாட வேண்டும் என்ற ஆசை வந்ததாம்.
தற்போது மலியாவுக்கு 18 வயது, சாஷாவுக்கு 15 வயதாகிறது. வெள்ளை மாளிகையை விட்டு வெளியே வர வேண்டிய நேரமும் ஆகி விட்டது. இந் நிலையில் பிள்ளைகளுக்காக நிறுவிய விளையாட்டுக் கருவிகளை என்ன செய்வது என்று மிஷல் ஒபாமா யோசித்தார்.
புதிய அதிபர் ட்ரம்புக்கு பரோன் என்ற 10 வயது மகன் இருக்கிறார். அவருக்கு தேவைப்படலாமோ என்று விளையாட்டுக் கருவிகளை விட்டுச்செல்லட்டுமா என்று கேட்டிருக்கிறார்கள். ட்ரம்ப் வேண்டாம் என்று சொல்லி விடவே, அவற்றை எடுத்து தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்கள்.
கடந்த ஜூலை மாதம் தான் ஒபாமாவின் மூத்த மகள் மலியா தனது 18 வது பிறந்த நாளை வெள்ளை மாளிகையில் கொண்டாடினார். 16 மற்றும் 18வது பிறந்த நாளை வெள்ளை மாளிகையில் கொண்டாடியவர் மலியா மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது.