எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடங்கும் ‘17–ந்தேதி என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பம்’ ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவிப்பு
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடங்கும் வரும் 17–ந்தேதி எனது அரசியல் பயணம் ஆரம்பம் ஆகும் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.
தீபா வீட்டில் தொண்டர்கள்
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலில் இறங்க உள்ளார். இதனையொட்டி சென்னை தியாகராயநகர், சிவஞானம் தெருவில் உள்ள அவருடைய வீட்டிற்கு தினமும் மாநிலம் முழுவதில் இருந்தும் அ.தி.மு.க. தொண்டர்களில் ஒரு பகுதியினர் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் மத்தியில் தினசரி மாலையில் சிறிது நேரம் தீபா பேசி வருகிறார்.
அந்தவகையில் விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சீபுரம், மதுரை, திண்டுக்கல், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் சென்னை மாநகர பகுதியில் உள்ள கொளத்தூர், அகரம், எழும்பூர், பெரம்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் நேற்று வந்தனர்.
நல்ல பாதை
அவர்கள் மத்தியில் நேற்று மாலை 5.05 மணி அளவில் தீபா வீட்டு பால்கனியில் நின்றபடி பேசினார். அருகில் அவருடைய கணவர் மாதவன் உடனிருந்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து என்னை (தீபா) பார்க்க வந்த அனைவரும், ஜெயலலிதா மீது வைத்திருந்த அன்பின் காரணமாக இங்கு வந்திருப்பதாக உணருகிறேன். ஜெயலலிதாவின் பெயரையும், புகழையும் மீண்டும் நிலைநாட்டுவோம். அதற்கு முடிந்த அளவு முழுமையாக செயலில் இறங்குவோம்.
இதற்காக அனைவரின் கருத்தையும் தெரிந்து கொள்ள விரும்புவதுடன், அனைவரிடமும் கருத்து பரிமாறிக்கொள்ள உள்ளேன். தமிழக மக்களுக்காக நல்ல பாதையை மேற்கொள்வோம். இதுகுறித்து அனைவருடைய விருப்பத்தையும் கேட்க விரும்புவதால், உங்கள் கருத்துகளை எழுதி வெளியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட கேட்டுக் கொள்கிறேன்.
அரசியல் பயணம் தொடங்கும்
என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவோம். எம்.ஜி.ஆருடைய ஆசியும், ஜெயலலிதாவின் ஆசியும் நமக்கு தேவை. இதனால் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டான வரும் 17–ந்தேதி முதல் என்னுடைய அரசியல் பயணம் தொடங்கும். நல்ல எதிர்காலத்திற்காக நம் பயணம் தொடரும். அம்மாவின் பெயரும், புகழும் ஓங்க வேண்டும். அனைவரின் விருப்பத்திற்கு ஏற்ப நம் நடவடிக்கைகள் வருங்காலத்தில் இருக்கும். உங்களுக்காக நான் பணியாற்றுவேன். இவ்வாறு தீபா பேசினார்.
நன்றி : தினத்தந்தி