சீனாவின் தொழிற்பூங்கா திட்டத்துக்கு எதிராக பிரதமர் முன்னிலையில் ராஜபக்சே ஆதரவாளர்கள் ரகளை கல் வீச்சு, கண்ணீர் புகை வீச்சால் பரபரப்பு
இலங்கையில், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சொந்த ஊரான ஹம்பன்தோட்டா துறைமுக நகரில், சீனாவின் நிதி உதவியுடன் சிறப்பு பொருளாதார மண்டலம் (தொழிற்பூங்கா) அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, சீன தூதர் ஜி ஜியான்லியாங் மற்றும் மூத்த மந்திரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிலையில், தொழிற்பூங்காவுக்காக தனியார் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விழா நடந்த பகுதிக்குள் ராஜபக்சே ஆதரவாளர்களும், புத்த துறவிகளும் அத்துமீறி புகுந்தனர். 14 நாட்களுக்கு எவ்வித போராட்டமும் நடத்தக்கூடாது என்று கோர்ட்டு பிறப்பித்த தடை உத்தரவை மீறி அவர்கள் நுழைந்தனர்.
அவர்களை தடுத்த போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்டனர். விழா மேடையை நோக்கி கல் வீசினர். அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், தண்ணீரையும் பீய்ச்சி அடித்தனர். கல் வீச்சில் 3 போலீசார் உள்பட 20 பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
நன்றி : தினத்தந்தி