தமிழகத்துக்கு தனியாக கவர்னர் நியமிக்கப்படாததால் குடியரசு தினத்தன்று ஓ.பன்னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுவாரா?
தமிழகத்துக்கு தனியாக கவர்னர் இன்னும் நியமிக்கப்படாததால், வருகிற 26–ந்தேதி குடியரசு தினத்தன்று தேசிய கொடியை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேசிய கொடி
மாநிலங்களில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15–ந்தேதி சுதந்திர தினத்தன்று முதல்–அமைச்சர்களும், ஜனவரி 26–ந்தேதி குடியரசு தினத்தன்று கவர்னர்களும் தேசிய கொடியை ஏற்றும் நடைமுறை இருந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சுதந்திர தினத்தன்று சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்–அமைச்சரும், குடியரசு தினத்தன்று கடற்கரை காமராஜர் சாலையில், காந்திசிலை அருகில் கவர்னரும் கொடியேற்றுவார்கள்.
இந்த ஆண்டு வருகிற 26–ந்தேதி குடியரசு தினத்தன்று கவர்னர் கொடியேற்றமாட்டார் என்றும் அவருக்கு பதில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடியேற்றுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் பொறுப்பு
தமிழகத்துக்கு தனியாக இன்னும் கவர்னர் நியமிக்கப்படவில்லை. மராட்டிய கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். அவர் வருகிற 26–ந்தேதி மராட்டிய கவர்னர் என்ற முறையில் மும்பையில் கொடியேற்ற இருப்பதால் சென்னையில் அன்றைய தினம் அவர் கொடியேற்ற முடியாது.
எனவே வருகிற 26–ந்தேதி சென்னையில் கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னருக்கு பதில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய கொடியேற்றி வைப்பார். இது தொடர்பான கடிதத்தை தமிழக அரசுக்கு கவர்னர் மாளிகையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொடி ஏற்றுவாரா?
ஆனால், குடியரசு தினத்துக்கு முன்பாகவே தமிழகத்துக்கு தனியாக ஒரு கவர்னர் நியமிக்கப்பட்டு விடுவார். ஆந்திராவை சேர்ந்த தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணராஜ், தமிழக கவர்னராக விரைவில் நியமிக்கப்பட்டு விடுவார் என்றும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. எனவே வருகிற 26–ந்தேதி குடியரசு தினத்தன்று தேசிய கொடியை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுவாரா? அல்லது புதிய கவர்னராக நியமிக்கப்படுபவர் கொடி ஏற்றுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நன்றி : தினத்தந்தி