இந்தியா ஏ–இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது
இந்தியா ‘ஏ’–இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது.
முதலாவது பயிற்சி ஆட்டம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து 0–4 என்ற கணக்கில் இந்தியாவிடம் படுதோல்வி கண்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சொந்த நாடு சென்று இருந்த இங்கிலாந்து அணி மீண்டும் இந்தியா வந்துள்ளது. இங்கிலாந்து அணி, 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது.
இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் வருகிற 15–ந் தேதி நடக்கிறது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி, இந்திய ‘ஏ’ அணியுடன் 2 பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது.
டோனி கேப்டன்
இந்தியா ஏ–இங்கிலாந்து லெவன் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் மும்பையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. டோனி தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியில் ஷிகர் தவான், மன்தீப்சிங், அம்பத்தி ராயுடு, யுவராஜ்சிங், ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திரா சாஹல், நெஹரா, மொகித் ஷர்மா, சித்தார்த் கவுல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து ஒருநாள் அணியில் மொயீன் அலி, பேர்ஸ்டோவ், ஜாக் பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ்பட்லர், டாவ்சன், அலெக்ஸ் ஹாலெஸ், பிளங்கெட், அடில் ரஷித், ஜோரூட், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லே, கிறிஸ்வோக்ஸ்.
இந்தியா ‘ஏ’–இங்கிலாந்து அணிகள் இடையிலான 2–வது பயிற்சி ஆட்டம் மும்பையில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்த ஆட்டத்துக்கான இந்திய ‘ஏ’ அணியில் கேப்டனாக ரஹானே இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்துக்கான இந்திய ‘ஏ’ அணியில் டோனி, யுவராஜ்சிங் உள்பட முதல் ஆட்டத்தில் ஆடும் வீரர்கள் இடம் பெறமாட்டார்கள்.
யுவராஜ்சிங் பேட்டி
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடர் குறித்து யுவராஜ்சிங் அளித்த பேட்டியில், ‘இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன் டோனி. அவர் தலைமையில் நமது அணி 2 உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. இவையெல்லாம் அற்புதமான சாதனைகளாகும். இதுபோல் எத்தனை கேப்டன்கள் சாதித்து இருப்பார்கள் என்று தெரியவில்லை. கேப்டன் பதவியில் இருந்து விலக அவர் எடுத்த முடிவை சிறப்பானதாக நான் கருதுகிறேன். உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக மற்றொருவர் கேப்டன் பதவியை ஏற்க இது சரியான நேரம் என்பதை உணர்ந்து அவர் முடிவு எடுத்து இருப்பார். கேப்டன் விராட்கோலி சிறப்பான ஆட்டத்தை நிலையாக வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஆட்டம் நாளுக்கு நாள் ஏற்றம் பெற்று வருகிறது. முந்தைய காலங்களில் நானும், டோனியும் இணைந்து ஆடுகையில் அச்சமின்றி அடித்து ஆடி இருக்கிறோம். அதேபோல் வரும் போட்டிகளிலும் இருவரும் அச்சமின்றி விளையாட முடியும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.
நன்றி : தினத்தந்தி