வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்தில் ரூ.4 லட்சம் கோடிக்கு வரி ஏய்ப்பு வருமான வரி இலாகா சந்தேகம்
வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்தில் ரூ.4 லட்சம் கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்று வருமான வரி இலாகா சந்தேகிக்கிறது.
சந்தேகம்
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8–ந்தேதி இரவு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். பண மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு டிசம்பர் 30–ந்தேதி வரை அவகாசமும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தங்களிடம் இருந்த பண மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் செலுத்தத் தொடங்கினர்.
உயர் மதிப்பிலான பணத்தில் பெரும் தொகை வங்கிக்கு வந்துவிட்டதால் டெபாசிட் செய்த பணத்தில் வரி ஏய்ப்பு அதிக அளவில் நடந்திருக்கலாம் என்று வருமான வரி இலாகாவுக்கு சந்தேகம் எழுந்து இருக்கிறது.
நவம்பர் 8–ந்தேதி முதல் டிசம்பர் 30–ந்தேதி முடிய வங்கிகளில் டெபாசிட் செலுத்தப்பட்ட பணம் பற்றிய புள்ளிவிவரங்களை தெரிவித்து வருமான வரி இலாகாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
ரூ.4 லட்சம் கோடிக்கு வரி ஏய்ப்பு?
இந்த கால கட்டத்தில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த தொகையில் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.4 லட்சம் கோடி வரை வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுபற்றிய விவரங்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட டெபாசிட்தாரருக்கு நோட்டீஸ் அனுப்ப வருமான வரி இலாகா உத்தரவிட்டு இருக்கிறது.
எங்களிடம் குவிந்துள்ள புள்ளிவிவரங்களை ஆய்வு செய்ததில் 60 லட்சம் வங்கி கணக்குகளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்து இருக்கிறது. இதுபோன்ற கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்த தொகை ரூ.7.34 லட்சம் கோடி ஆகும்.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வங்கிகளில் நவம்பர் 9–ந்தேதியில் இருந்து டிசம்பர் 30–ந்தேதி முடிய செலுத்தப்பட்டுள்ள 10,700 கோடி ரூபாய், கூட்டுறவு வங்கிகளில் செலுத்தப்பட்ட ரூ.16 ஆயிரம் கோடி, ஊரக வங்கிகளில் செலுத்தப்பட்ட ரூ.13 ஆயிரம் கோடி குறித்து வருமான வரி இலாகாவும், அமலாக்கப் பிரிவும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. இவை வருமான வரி இலாகாவின் விசாரணைக்கும் உட்படுத்தப்படும்.
செயலற்ற வங்கி கணக்கு
இதே கால கட்டத்தில் செயலற்று கிடந்த வங்கிக் கணக்குகளில் ரூ.25 ஆயிரம் கோடியும், பல்வேறு வித கடன்களை திருப்பிச் செலுத்திய வகையில் ரூ.80 ஆயிரம் கோடியும் டெபாசிட் ஆகி உள்ளது.
நவம்பர் 8–ந்தேதி முதல் பல்வேறு பிரிவுகளில் வாடிக்கையாளர்களால் டெபாசிட் செய்யப்பட்ட தொகை குறித்து வங்கிகளிடம் தகவல்கள் பெறப்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் அனைத்தும் ஒன்றாக தொகுக்கப்பட்டு, அரசிடம் உள்ள புள்ளி விவரங்களுடன்ஒப்பீடு செய்யப்படும்.
இவற்றை தீவிரமாக பரிசீலனை செய்த பின்பு, அவை வருமான வரி இலாகா, அமலாக்கப் பிரிவு மற்றும் இதர சட்ட அமலாக்க முகமைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்ட 60 லட்சம் கணக்குகளில் 6 லட்சத்து 80 ஆயிரம் கணக்குகள் அரசிடம் உள்ள பல்வேறு புள்ளிவிவரங்களுடன் பொருந்திப் போகிறது. இவை மேல் நடவடிக்கைக்காக வருமான வரி இலாகாவிற்கு அனுப்பி வைக்கப்படும்.
இது தவிர பயங்கரவாதத்தால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் மாநிலங்களில் அதிக அளவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட தொகை பற்றிய புள்ளிவிவரங்களும் சட்ட அமலாக்க முகமையினரின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படும்.
பிரதமர் வங்கி கணக்கு
பான் நம்பர், மொபைல் போன் நம்பர் அல்லது முகவரி ஆகியவற்றை தெரிவித்து ரூ.2 லட்சம் முதல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை வங்கிகளில் பணம் செலுத்தப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.42 ஆயிரம் கோடி. இவற்றை வருமான வரி இலாகாவினர் உன்னிப்பாக ஆய்வு செய்வார்கள்.
பிரதமரின் தன்ஜன் யோஜனா வங்கி கணக்கின் கீழ் வங்கிகளில் செலுத்தப்பட்ட பணம் பற்றியும் வங்கிகள் வருமான வரி இலாகாவிடம் தகவல்களை பகிர்ந்து கொள்ளும். இத்திட்டத்தின் கீழ், 1 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக செலுத்தப்பட்ட தொகையையும் வருமான வரி இலாகா தீவிரமாக ஆய்வு செய்யும்.
இதேபோல் செயலற்ற வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்த ரூ.25 ஆயிரம் கோடி, கடன்களுக்காக செலுத்தப்பட்ட ரூ.80 ஆயிரம் கோடி பற்றியும் சட்ட அமலாக்க முகமைகளுடன் தகவல்கள் பகிர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
வரி வசூல் அதிகமாகும்
புலனாய்வு தகவல்களின் அடிப்படையில், வருமான வரித்துறை இவற்றில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும். இதேபோல் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்படும். கணக்கில் காட்டாத வருமானத்தை வங்கிகளில் செலுத்திய தனி நபர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதும் நடவடிக்கைகள் பாயும்.
ஏற்கனவே பான் நம்பர் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக வங்கிகளில் செலுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு நிதி ஆதாரம் எப்படி வந்தது, என்பதை இனம் கண்டு அவர்கள் வருமான வரி செலுத்துவோர் பட்டியலுக்குள் கொண்டு வரப்படுவார்கள். இதன் மூலம் நேரடி வரி வசூல் அதிகமாகும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
நன்றி : தினத்தந்தி